ஐ.பி.எல். தொடரில் பாண்ட்யா சந்தித்த விமர்சனங்கள் குறித்து மவுனம் கலைத்த பும்ரா


ஐ.பி.எல். தொடரில் பாண்ட்யா சந்தித்த விமர்சனங்கள் குறித்து மவுனம் கலைத்த பும்ரா
x

image courtesy: AFP

ஐ.பி.எல். தொடரின்போது ரசிகர்கள் எதிர்த்தாலும் பாண்ட்யாவுக்கு ஆதரவு கொடுக்கவே முயற்சித்ததாக பும்ரா கூறியுள்ளார்.

மும்பை,

இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். டி20 தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால் ஐ.பி.எல். வரலாற்றில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து பரிதாபமாக வெளியேறியது.

இம்முறை அந்த அணிக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை வருங்காலத்தை கருத்தில் கொண்டு மும்பை நிர்வாகம் கழற்றி விட்டது. அத்துடன் ஹர்திக் பாண்ட்யாவை குஜராத்திடமிருந்து வாங்கிய மும்பை நிர்வாகம் தங்களுடைய புதிய கேப்டனாக அறிவித்தது. ஆனால் அந்த முடிவு மும்பை ரசிகர்களிடமே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதன் காரணமாக ஒவ்வொரு போட்டியிலும் மும்பை ரசிகர்களே தங்களுடைய கேப்டன் என்று பாராமல் பாண்டியாவுக்கு எதிராக முழக்கமிட்டனர். அப்படி சொந்த ரசிகர்களின் ஆதரவு பெறாமல் மிகப்பெரிய அழுத்தத்தை சந்தித்த பாண்ட்யா சுமாராக விளையாடி மும்பையின் தோல்விக்கு காரணமாக அமைந்தார்.

இருப்பினும் டி20 உலகக்கோப்பையில் இந்தியா வெற்றி பெற முக்கிய பங்காற்றிய பாண்ட்யா தற்போது மீண்டும் ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளார். முன்னதாக பாண்ட்யாவை கேப்டனாக நியமித்தது சூர்யகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்ட மும்பை வீரர்களுக்கே பிடிக்கவில்லை என்ற செய்திகள் காணப்பட்டன.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மவுனம் கலைத்துள்ள பும்ரா ரசிகர்கள் எதிர்த்தாலும் பாண்ட்யாவுக்கு ஆதரவு கொடுக்கவே முயற்சித்ததாக கூறியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "சில நேரங்களில் உணர்ச்சிகள் பேசும் பொருளாக இருக்கக்கூடிய நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இந்தியாவில் அது ஒரு வீரரை பாதிக்கும். உங்களுடைய சொந்த ரசிகர்களே நன்றாக பேசவில்லை என்றால் என்ன செய்ய முடியும்? அப்போதெல்லாம் உங்கள் மீது கவனம் செலுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் அது எளிதல்ல.

பாண்ட்யாவை ரசிகர்கள் எதிர்த்தது குறித்து நீங்கள் கேட்கிறீர்கள். இருப்பினும் ஒரு அணியாக அதை ஆதரிக்காத நாங்கள் அவரிடம் பேசினோம். குடும்பமும் ஆதரவாக இருந்தது. சில விஷயங்கள் உங்களுடைய கட்டுப்பாட்டுக்கு அப்பால் இருக்கும். ஆனால் அதே கதை நாங்கள் உலகக்கோப்பை வென்றதும் மாறியது. தற்போது மக்கள் பாராட்டுகின்றனர். ஆனால் தோல்வியை சந்தித்தால் மீண்டும் இந்த கதை மாறிவிடும்.

ஏனெனில் மிகவும் புகழ்பெற்ற விளையாட்டில் விளையாடும் ஒவ்வொரு விளையாட்டு வீரரும் இதை கடந்து செல்வார்கள். கால்பந்தில் உலகின் சிறந்த வீரர்கள் கூட இவற்றை சந்திப்பார்கள். இது நியாயமற்றது என்றாலும் இப்படித்தான் இருக்கும். எனவே ஒரு அணியாக நாங்கள் கேப்டனை பின்னே விட முடியாது. ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து உதவி செய்ய முயற்சித்தோம். பாண்டியாவுடன் இணைந்து நான் நிறைய கிரிக்கெட்டை விளையாடியுள்ளேன். அதனால் ஒன்றாக இணைந்து அவருக்கு நாங்கள் உதவி செய்ய முயற்சித்தோம்" என்று கூறினார்.


Next Story