டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்வதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது - இலங்கை முன்னாள் வீரர்
டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்வதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது என்று குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்,
20 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூன் 5-ந்தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது.
இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்கும் நிலையில், துணை கேப்டன் பொறுப்பு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல விக்கெட் கீப்பர்களாக நல்ல பார்மில் உள்ள ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தேர்வாகியுள்ளது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆனால் இந்த அணியில் நடப்பு ஐ.பி.எல். சீசனில் அசத்தி வரும் நடராஜன், கெய்க்வாட், ரியான் பராக் ஆகிய வீரர்களை தேர்வுக்குழு கழற்றி விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அதனால் இம்முறையும் கோப்பையை வெல்வது கடினம் என்று பல இந்திய ரசிகர்களே சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியில் ஆல் ரவுண்டர்களும் தரமான ஸ்பின்னர்களும் போதுமான அளவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார். எனவே சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் எதிரணியை சாய்ப்பதற்கான கலவை இந்தியாவிடம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். அத்துடன் வெஸ்ட் இண்டீசில் சூழ்நிலை எப்படி இருக்கும் என்பது ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட்டுக்கு தெரியும் என்றும் சங்கக்காரா கூறியுள்ளார்.
அதற்கு தகுந்தாற்போல் அணியும் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்வதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளதாக கூறும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:- "இந்த அணி மிகவும் வலிமையாக இருக்கிறது. அவர்கள் தங்களுடைய பேட்டிங்கை பூர்த்தி செய்துள்ளனர். ஆல் ரவுண்டர்களை பெற்றுள்ளனர். உயர்தரமான ஸ்பின்னர்களை கொண்டுள்ளனர். அதனால் விளையாடுவதற்கு தகுந்த மிகச்சிறந்த கலவையை அவர்கள் பெற்றுள்ளார்கள்.
அங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் விளையாடி கோப்பையை வெல்வதற்கு எம்மாதிரியான அணி தேவை என்பது ரோகித் மற்றும் டிராவிட்டுக்கு தெரியும். அவர்களிடம் 2 முதல் 3 விதமான அணிகளை உருவாக்குவதற்கு தேவையான வீரர்கள் இருக்கின்றனர். குறிப்பாக ஆழமான பேட்டிங் வரிசை அல்லது வலுவான பவுலிங் வரிசை கொண்ட அணி தேவைப்பட்டால் அதை அவர்களால் உருவாக்க முடியும். அந்த வகையில் இந்திய அணி மிகவும் சமநிலையுடன் இருக்கிறது. மேலும் இந்தியா எப்போதுமே சர்வதேச தொடர்களில் வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறது" என்று கூறினார்.