பார்டர்-கவாஸ்கர் டிராபி; இம்முறை இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றுவோம் - ஆஸ்திரேலிய வீரர் பேட்டி


பார்டர்-கவாஸ்கர் டிராபி; இம்முறை இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றுவோம் - ஆஸ்திரேலிய வீரர் பேட்டி
x

Image Courtesy: ICC Twitter

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.

அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், இம்முறை இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றுவோம் எனவும், என்னுடைய பேட்டிங் இடம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

அது பற்றி எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. இருப்பினும் பின்னணியில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நான் 4-வது இடத்தில் விளையாடுவதை விரும்புவதாக உஸ்மான் கவாஜா கூறியிருந்தார். மார்னஸ் லபுஸ்ஷேனும் அதே கருத்தை தெரிவித்திருந்தார். எனவே பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் அணிக்காக நான் எங்கு வேண்டுமானாலும் பேட்டிங் செய்ய மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். எனவே என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.

ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்சமயத்தில் உலகின் டாப் 2 அணிகள். கடந்த வருடம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நாங்கள் அவர்களை வீழ்த்தினோம். கடந்த 2 முறை இந்தியா இங்கே நல்ல கிரிக்கெட்டை விளையாடி தொடரை கைப்பற்றி உள்ளனர். ஆனால் இம்முறை நாங்கள் அதை மாற்றுவோம் என்று நம்புகிறோம். பார்டர் - கவாஸ்கர் கோப்பையை நாங்கள் வென்று 10 வருடங்கள் கடந்து விட்டது. இந்த வருடம் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றுவோம் . இவ்வாறு அவர் கூறினார்.


Next Story