பார்டர் கவாஸ்கர் கோப்பைக்காக தீவிரமாக தயாராகும் பேட் கம்மின்ஸ்


பார்டர் கவாஸ்கர் கோப்பைக்காக தீவிரமாக தயாராகும் பேட் கம்மின்ஸ்
x

கோப்புப்படம்

இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை குறித்து பேட் கம்மின்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான (2024/25) டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

இந்திய அணி 2018/19 மற்றும் 2020/21 பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாடியது. அந்த இரண்டு தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. மேலும் இந்தியா கடந்த 4 பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபியை தொடர்ச்சியாக வென்று அசத்தி உள்ளது. அந்த வரிசையில் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா எதிர்கொள்கிறது. அதனால் ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ஆனால் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் இம்முறை நிச்சயம் ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தும் என்று தெரிவித்திருந்தார். ஆஷஸ் டெஸ்ட் தொடர் முதல் உலகக்கோப்பை வரை முக்கியமான கோப்பைகளை வென்றுள்ள ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், இதுவரை பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றதில்லை.

இந்நிலையில் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்காக தயாராகும் விதத்தில், ஏழு முதல் எட்டு வாரங்கள் வரை ஓய்வில் இருக்கப் போவதாக பேட் கம்மின்ஸ் அறிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "பார்டர் கவாஸ்கர் கோப்பை இதற்கு முன்னர் நான் இதுவரை வெல்லாத ஒரு கோப்பையாகும். எங்கள் அணியில் இதுவரை பலர் வெல்லாத ஒரு கோப்பை இதுவாகும். கடந்த சில வருடங்களாகவே டெஸ்ட் தொடரில் அற்புதமான சாதனைகளை நாங்கள் செய்து வருகிறோம். சொந்த மண்ணில் நடக்கும் ஒவ்வொரு தொடரிலும் சாதிப்பதற்கு ஒவ்வொரு முறையும் வருகிறீர்கள். ஆனால் அதற்கு அணியின் மேல் மட்டத்திலிருந்து முழு தீவிரத்தையும் கொடுத்து விளையாட வேண்டியது அவசியம். இதுதான் இந்த கோடை காலத்தில் நமக்கு இருக்கும் சவாலாகும்.

தற்போதைய இந்தியா அணி மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. நாங்கள் அவர்களுடன் நிறைய போட்டிகள் விளையாடி இருக்கிறோம். அதனால் அவர்களை நாங்கள் நன்கு அறிவோம். எங்கள் அணியும் சிறப்பாக உள்ளது என்று நம்புகிறேன்" என்று பேட் கம்மின்ஸ் தெரிவித்தார்.


Next Story