இம்பேக்ட் பிளேயர் விதிமுறை இருப்பதால் பேட்டிங் ஆர்டர் பலம் அதிகமாகிறது - பேட் கம்மின்ஸ்


இம்பேக்ட் பிளேயர் விதிமுறை இருப்பதால் பேட்டிங் ஆர்டர் பலம் அதிகமாகிறது - பேட் கம்மின்ஸ்
x

Image Courtesy: Twitter

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

முல்லன்பூர்,

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டம் முல்லன்பூரில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் தரப்பில் அதிரடியாக ஆடிய நிதிஷ் ரெட்டி 64 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் முலம் 2 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது.

இதையடுத்து இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த நிதிஷ் ரெட்டிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் ஐதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது,

இந்த போட்டி மிகச் சிறப்பான ஒரு போட்டியாக அமைந்தது. பஞ்சாப் அணியின் வீரர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி எங்களை போட்டியின் ஆரம்பத்திலேயே பின்னுக்கு தள்ளினர். ஆனால் அதிலிருந்து மீண்டு வந்து 180 ரன்கள் குவித்தது சிறப்பாக இருந்தது. ஐ.பி.எல் தொடரை பொறுத்தவரை இம்பேக்ட் பிளேயர் விதிமுறை இருப்பதால் பேட்டிங் ஆர்டர் பலம் அதிகமாகிறது. எனவே எப்போது வேண்டுமென்றாலும் ஒரு அணியால் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.

இந்த விதிமுறை இருப்பதினால் இனி 150 முதல் 160 ரன்கள் வரை அடிக்கும் பட்சத்தில் பத்தில் ஒன்பது போட்டிகள் தோல்வியை தான் கொடுக்கும். அதே வேளையில் இந்த 180 ரன்களை வைத்து நாங்கள் புதிய பந்தில் சிறப்பாக பந்துவீசினால் நிச்சயம் வெற்றியை நோக்கி செல்ல முடியும் என்று நினைத்தோம்.

அந்த வகையில் மைதானத்தின் தன்மையை கணித்து நானும் புவனேஷ்வர் குமாரும் பந்துவீச்சில் சிறப்பான துவக்கத்தை அளித்தோம். அதோடு மிடில் ஓவர்களிலும் எங்களது அணியில் நல்ல ஸ்பின்னர்கள் இருந்ததனால் இந்த போட்டியை வெற்றிகரமாக முடிக்க முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story