'உலகக்கோப்பை தொடருக்கு தேர்வாகும் வீரர்களுக்கு நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்க வேண்டும்'- ஷகிப் அல் ஹசன்


உலகக்கோப்பை தொடருக்கு தேர்வாகும் வீரர்களுக்கு நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்க வேண்டும்- ஷகிப் அல் ஹசன்
x

image courtesy; AFP

தினத்தந்தி 11 Sept 2023 1:48 PM IST (Updated: 11 Sept 2023 1:56 PM IST)
t-max-icont-min-icon

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் முதல் 2 போட்டிகளிலும் வங்காளதேச அணி தோல்வியடைந்தது.

கொழும்பு,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்துகிறது. இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது.

6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தன. சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இதில் வங்காளதேச அணி சூப்பர் 4 சுற்றில் தனது முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது. இதன் மூலம் வங்காளதேச அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பு ஏறக்குறைய முடிந்தது. வங்காளதேச அணி சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா உடன் வருகிற 15ஆம் தேதி விளையாட உள்ளது.

ஆசிய கோப்பை தொடர் முடிவடைந்ததும் வங்காளதேச அணி உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் வருகிற 21ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் 'உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக காயப்பிரச்சினை இன்றி வீரர்கள் முழு உடல்தகுதியுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். எனவே உலகக்கோப்பை தொடருக்கு தேர்வாகும் வீரர்களுக்கு நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்க வேண்டும். மேலும் உலகக்கோப்பை தொடருக்காக இந்தியாவில் நிறைய இடங்களுக்கு பயணிக்க வேண்டியது இருப்பதால் இந்த தொடரில் அவர்களுக்கு ஓய்வு அளிப்பது நன்றாக இருக்கும்' என்று வங்காளதேச கேப்டன் ஷகிப் அல்-ஹசன் கூறியுள்ளார்.


Next Story