விராட் கோலியும், ராகுலும் பொறுமையுடன் ஆடி, சாதுர்யமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தினர் - ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித்
விராட் கோலியும், ராகுலும் பொறுமையுடன் ஆடி, சாதுர்யமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தினர் என்று ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் கூறியுள்ளார்.
சென்னை,
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை பந்தாடியது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 199 ரன்னில் அடங்கியது. ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அஸ்வின் ஆகியோர் கூட்டாக 6 விக்கெட்டுகளை சாய்த்தனர். அத்துடன் அவர்களது பந்து வீச்சில் 101 பந்துகளில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ரன்னே எடுக்கவில்லை.
இந்த நிலையில் இதுகுறித்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் கூறுகையில், 'இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் உண்மையிலேயே அபாரமாக பந்து வீசினர். ஆடுகளம் அவர்களது பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் காணப்பட்டது. அவர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட்டனர். நாங்கள் சுழற்பந்து வீச்சில் தடுமாறி விட்டோம்.
இந்தியா 2 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டோம். விராட் கோலியும் (85 ரன்), லோகேஷ் ராகுலும் (97 ரன்) மிகவும் பொறுமையுடன் ஆடினர். சாதுர்யமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தினர். 200 ரன் இலக்கு என்பது கொஞ்சம் குறைவான ஸ்கோர் தான். 250 ரன்கள் எடுத்திருந்தால் ஆட்டம் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். இரவில் பனியின் தாக்கம் இந்தியாவின் பேட்டிங்கை இலகுவாக்கியது' என்றார்.