வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றி...டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியாவின் நிலை என்ன?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.
அடிலெய்டு,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் ஏற்கனவே 56.25% புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா அணி தற்போது கூடுதலாக புள்ளிகள் பெற்று தனது முன்னிலையை வலுப்படுத்தி உள்ளது. இதில் இந்திய அணி 54.16% புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி சில புள்ளிகளை இழந்து 1 இடம் பின்தங்கியுள்ளது.
புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா (61.11%) முதல் இடத்திலும், இந்தியா (54.16%) இரண்டாம் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா (50.00%) 3ம் இடத்திலும், நியூசிலாந்து (50.00%) 4ம் இடத்திலும், வங்காளதேசம் (50.00%) 5ம் இடத்திலும், பாகிஸ்தான் (36.66%) 6ம் இடத்திலும், இங்கிலாந்து (15.00%) 7ம் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் (11.11%) 8ம் இடத்திலும், இலங்கை (00.00%) 9ம் இடத்திலும் உள்ளன.