கோலியின் விக்கெட்டை எடுக்கும் வரை ஆஸி. அணியால் நிம்மதியாக இருக்கமுடியாது..! கூறும் முன்னாள் ஆஸி. பயிற்சியாளர்
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிவரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
லண்டன்,
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிவரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு 444 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து உள்ளது.
இந்த இலக்கை நோக்கி இந்திய அணி தனது இரண்டாம் இன்னிங்சில் விளையாடி செய்துவருகிறது. இதில் ரோகித் சர்மா 43 ரன்களும், சுப்மன் கில் 18 ரன்களும், புஜாரா 27 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.
அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் கோலியும் ரகானேவும் ஈடுபட்டு வருகின்றனர். இருவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அவ்வபோது பவுண்டரிகளையும் அடித்து அணியின் ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தி வருகின்றனர்.
இந்திய அணி 4ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 44 ரன்களுடனும், ரகானே 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். கடைசி நாள் எஞ்சியுள்ள நிலையில், இந்தியாவின் வெற்றிக்கு 280 ரன்கள் தேவைப்படுகிறது. அதே சமயத்தில் மீதமுள்ள 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வெல்ல ஆஸ்திரேலிய அணி முனைப்பு காட்டிவருகிறது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு கோலியின் விக்கெட் முக்கியம் என்று அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது,
"விராட் கோலி களத்தில் இருக்கும் வரை இந்திய அணியால் இந்த டெஸ்ட் போட்டியை வெல்லமுடியும். ஏனெனில், சிறந்த வீரர்களால் தான் அற்புதங்களை செய்துமுடிக்க முடியும். விராட் கோலியும் அப்படியான வீரர் தான். கோலியின் விக்கெட்டை எடுத்துமுடிக்கும் வரை ஆஸ்திரேலிய அணியால் நிம்மதியாக இருக்கமுடியாது." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.