'ஆசிய கோப்பை தோல்வி எங்களது அணியின் வீரர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும்' இலங்கை பயிற்சியாளர்


ஆசிய கோப்பை  தோல்வி எங்களது அணியின் வீரர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் இலங்கை பயிற்சியாளர்
x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாளை (வியாழன் கிழமை) நடைபெற உள்ளது.

மும்பை,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. 31 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 14 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஆனால் இதுவரை எந்த அணியும் அரைஇறுதியை எட்டவில்லை.

இதில் நாளை நடைபெற உள்ள 33-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் சந்தித்த தோல்வியை மறக்கவில்லை என்று இலங்கை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தெரிவித்துள்ளார். இருப்பினும் இம்முறை அதையே உத்வேகமாக எடுத்துக்கொண்டு இந்த ஆட்டத்தில் தங்களுடைய அணியின் வீரர்கள் இந்தியாவை சாய்க்க போராடுவார்கள் என்று கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு;-

"ஆசிய கோப்பையில் சந்தித்த அந்த தோல்வி எங்களுடைய அணியில் சில உத்வேகத்தை அளிக்கும் என்று நம்புகிறேன். குறிப்பாக ஆசிய கோப்பையில் சந்தித்த தோல்வி எங்களுடைய வீரர்களுக்கு இந்த ஆட்டத்தில் போராடுவதற்கான உத்வேகத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன். இந்த தொடரில் இந்திய அணி சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள். ஆனால் எங்களுடைய வீரர்கள் சிறந்தவர்கள் என்பதை இந்தியாவுக்கு காண்பிப்பதற்கு இது நல்ல வாய்ப்பு என்று நான் கருதுகிறேன்" என்று கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வி அடைந்தால் உலகக்கோப்பை தொடரில் இருந்து லீக் சுற்றுடன் வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story