உ.பி. வாரியர்ஸ் அணியின் கேப்டனாக அலிசா ஹீலி நியமனம்
உ.பி. வாரியர்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலிசா ஹீலி நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை,
முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை மும்பையில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 5 அணிகளில் ஒன்றான உ.பி. வாரியர்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலிசா ஹீலியை அந்த அணி நிர்வாகம் நேற்று நியமித்தது.
20 ஓவர் கிரிக்கெட்டில் 5 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றவரான 32 வயதான அலிசா ஹீலி இதுவரை 139 ஆட்டங்களில் ஆடி ஒரு சதம், 14 அரைசதம் உள்பட 2,446 ரன்கள் சேர்த்துள்ளார்.
பிரிமீயர் லீக்கில் ரூ. 70 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட அலிசா ஹீலி கூறும் போது, 'டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடங்குவதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். உ.பி. வாரியர்ஸ் அற்புதமான அணி. அனுபவமும், இளமையும் கலந்த அணியாக உள்ளது. எங்களது ரசிகர்களுக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதை எதிர்நோக்கி உள்ளோம்' என்றார்.
தீப்தி ஷர்மா, சோபி எக்லெஸ்டன், தாலியா மெக்ராத், ஷப்னிம் இஸ்மாயில், ராஜேஸ்வரி கெய்க்வாட் உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகளும் உ.பி. அணியில் அங்கம் வகிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.