வங்காளதேச கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியிலிருந்து ஆலன் டொனால்ட் விலகல்!
டைம்டு அவுட் விவகாரத்தில் வங்காளதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் மீது ஆலன் டொனால்ட் தனது அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
டாக்கா,
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை - வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் வங்காளதேச அணி வெற்றி பெற்றது.
விதிப்படி ஒரு வீரர் ஆட்டமிழந்தால் அடுத்து வரும் பேட்ஸ்மேன் 2 நிமிடங்களுக்குள் பந்தை எதிர் கொள்ள வேண்டும். மேத்யூஸ் உடனடியாக மைதானத்துக்கு வந்தாலும் பந்தை எதிர்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. அவரது ஹெல்மெட்டில் பிரச்சினை இருந்ததால் மாற்று ஹெல்மெட் கொண்டு வரும்படி மற்ற இலங்கை வீரர்களிடம் கூறினார். இதில் தாமதம் ஏற்பட்டதால் வங்காளதேச கேப்டன் ஷகிப்-அல்-ஹசன், நடுவர்களிடம் அதை சுட்டிக்காட்டி அவுட் கேட்டார். இதையடுத்து மேத்யூசுக்கு 'டைம்டு அவுட்' முறையில் அவுட் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த நிகழ்வுகளை பெவிலியனிலிருந்து பார்க்க முடியாமல் களத்திற்குள் சென்று, போதும் நிறுத்துங்கள் என்று தம்முடைய அணியின் கேப்டன் ஷகிப்பிடம் கூறலாம் என நினைத்ததாக வங்காளதேசத்தின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஆலன் டொனால்ட் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
இவரது இந்த கருத்திற்கு வங்காளதேச கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்டிருந்தது. இதனையொட்டி நேற்று புனேவில் நடந்த அணிக் கூட்டத்தின்போது ஆலன் டொனால்ட் தன் மீது உள்ள குற்றச்சாட்டுகளுக்கு தனது முடிவை வெளிப்படுத்தினார். அதில் இந்த உலகக்கோப்பை தொடருடன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அணி நிர்வாகத்திடம் கூறியுள்ளார்.
இதன் மூலம் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் பந்துவீச்சு பயிற்சியாளராக பதவியேற்ற டொனால்டின் பதவி நடப்பு 50 ஓவர் உலகக்கோப்பையுடன் முடிவுக்கு வருகிறது.
உலகக்கோப்பை தொடரில் வங்காளதேசம் தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் நாளை மோத உள்ளது.