அஜய் கிருஷ்ணா அபார பந்து வீச்சு : 12 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்து மதுரை பாந்தர்ஸ் 2-வது வெற்றியை பெற்றது.
சேலம்,
7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி சேலம் அருகே வாழப்பாடியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்குள் கால்பதிக்கும். இந்த நிலையில் நேற்றிரவு நடந்த 18-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசும், முன்னாள் சாம்பியன் மதுரை பாந்தர்சும் மோதின. 'டாஸ்' ஜெயித்த கில்லீஸ் கேப்டன் ஜெகதீசன் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
இதன்படி முதலில் பேட்டிங் தொடங்கிய மதுரைக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஆதித்யா (6 ரன்) மதன்குமாரால் சூப்பராக ரன்-அவுட் செய்யப்பட்டார். அடுத்து வந்த ஜே.கவுசிக் (4 ரன்), கேப்டன் ஹரி நிஷாந்த் (2 ரன்), லோகேஷ்வர் (6 ரன்) கில்லீசின் நேர்த்தியான பந்து வீச்சில் வீழ்ந்தனர். 18 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து மதுரை ஊசலாடியது. தொடர்ந்து சிறிது நேரம் போராடிய ஸ்வப்னில் சிங் (11 ரன்), ஸ்ரீ அபிசேக் (21 ரன்), தீபன் லிங்கேஷ் (9 ரன்) ஆகியோர் சுழற்பந்தில் சிக்கினர். அப்போது 79 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி மூன்று இலக்கத்தை தொடுமா? என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த நெருக்கடியான சூழலில் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் நிலைத்து நின்று விளையாடி தங்கள் அணியை சரிவில் இருந்து காப்பாற்றினார். அவருக்கு சரவணன் கைகொடுத்தார். இறுதியில் ரோகித்தின் ஓவரில் இரு சிக்சருடன் இன்னிங்சை வாஷிங்டன் சுந்தர் நிறைவு செய்தார். 20 ஓவர்களில் மதுரை அணி 7 விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்தது. வாஷிங்டன் சுந்தர் 56 ரன்களுடனும் (30 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்), சரவணன் 22 ரன்னுடனும் (17 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர். கில்லீஸ் தரப்பில் பாபா அபராஜித், சிலம்பரசன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
மதுரை வெற்றி
பின்னர் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சேப்பாக் சூப்பர் கில்லீசின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஜெகதீசனும், மாற்று ஆட்டக்காரர் சந்தோஷ் ஷிவும் களம் கண்டனர். நல்ல தொடக்கம் உருவாக்கிய இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 59 ரன்கள் எடுத்தனர். சந்தோஷ் ஷிவ் 28 ரன்னில் கேட்ச் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு பாபா அபராஜித் வந்தார்.
ஒரு கட்டத்தில் கில்லீஸ் அணி ஒரு விக்கெட்டுக்கு 72 ரன்களுடன் வலுவாக இருந்தது. ஆனால் ஜெகதீசன் (35 ரன், 29 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறியதும் ஆட்டத்தின் போக்கு தலைகீழானது. அவர் முருகன் அஸ்வினின் சுழற்பந்து வீச்சில் போல்டு ஆனார். இதன் பிறகு சஞ்சய் யாதவ் (9 ரன்), பிரதோஷ் ரஞ்சன் பால் (3 ரன்), சசிதேவ் (6 ரன்) குறிப்பிட்ட இடைவெளியில் பெவிலியன் திரும்பினர்.
ஆட்டத்தின் 19-வது ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் அஜய் கிருஷ்ணா ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை கபளீகரம் செய்து ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினார். இதையடுத்து கடைசி ஓவரில் கில்லீசின் வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்டது. கடைசி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்நீத் சிங் வீசினார். முதல் பந்தில் பாபா அபராஜித் (33 ரன், 29 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனதும் நம்பிக்கை முழுமையாக தகர்ந்தது. எஞ்சிய 5 பந்தில் கில்லீஸ் வீரர்கள் 2 ரன் மட்டுமே எடுத்தனர்.
20 ஓவர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 9 விக்கெட்டுக்கு 129 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் மதுரை அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது.. அஜய் கிருஷ்ணா 4 விக்கெட்டும், முருகன் அஸ்வின் 3 விக்கெட்டும் சாய்த்தனர்.
6-வது லீக்கில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு இது தொடர்ச்சியாக ஏற்பட்ட 4-வது தோல்வியாகும். இதன் மூலம் கில்லீஸ் அணியின் பிளே-ஆப் வாய்ப்பு வெகுவாக குறைந்து போய் விட்டது. 4-வது ஆட்டத்தில் ஆடிய மதுரைக்கு 2-வது வெற்றியாகும்.