ஒரே ஓவரில் 48 ரன் விளாசி வரலாற்று சாதனை படைத்த ஆப்கானிஸ்தான் அணி வீரர்...! ருதுராஜ் கெய்க்வாட்டின் சாதனையும் சமன்
ஒரு ஓவரில் 7 சிக்சர்கள் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டின் சாதனையையும் சமன் செய்து உள்ளார்.
காபூல்,
ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் பிரீமியர் லீக் என்ற பெயரில் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்து விட்டன. அதில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் ஷாகின் ஹண்டர்ஸ் மற்றும் அபாசின் டிபண்டர்ஸ் ஆகிய அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற அபாசின் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஷாஹின் அணி 18 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்து இருந்தது. அப்போது, கேப்டன் செதிகுல்லா அடல் 77 ரன்களிலும், செய்த் கான் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 19வது ஓவரை, அபாசின் அணியின் அமிர் சாஜாய் வீசினார். முதல் பந்தை நோ பாலாக வீச செதிகுல்லா அந்த பந்தில் சிக்சர் அடித்தார். இதையடுத்து வீசிய பந்து வைடுடன், பைஸ் முறையில் பவுண்டரி சென்றது. தொடர்ந்து வீசிய பிரீஹிட் பந்தில் சிக்சர் அடித்தார். அதன்பின்னர் வீசப்பட்ட 5 பந்துகளையும் அடுத்தடுத்து சிக்சர்களாக விளாசி அரங்கை அதிரவைத்தார். அந்த ஓவரில் மட்டும் 7 சிக்சர்கள் உள்பட 48 ரன்கள் கிடைத்தது. இதன் மூலம் ஒரு ஓவரில் 7 சிக்சர்கள் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டின் சாதனையை சமன் செய்தார். அதே வேளையில் ஒரு ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை சஜாய் படைத்தார்.
இந்த போட்டியில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த செதிகுல்லா, 56 பந்துகளில் 10 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் உட்பட 118 ரன்களை விளாசினார். இதனல் ஷாஹின் ஹண்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 213 ரன்களை குவித்தது. இதையடுத்து ஆடிய அபாசின் அணி 18.3 ஓவர்கள் முடிவில் 121 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
சாதனை படைத்த செதிகுல்லா அடல், ஆப்கானிஸ்தான் அணிக்காக ஒரே ஒரு சர்வதேச போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.