ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் புதிய சாதனை
நூறாவது போட்டியில் சதம் அடித்ததன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹோப் தனித்துவமான சாதனையை படைத்துள்ளார்.
போர்ட் ஆப் ஸ்பெயின்,
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் சாய் ஹோப் 135 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 115 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
நூறாவது போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஹோப் தனித்துவமான சாதனையை படைத்துள்ளார். இதுவரை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடியுள்ள வீரர்கள் யாரும் தாங்கள் விளையாடிய ஐம்பதாவது மற்றும் நூறாவது போட்டியில் சதம் விளாசியது கிடையாது. ஆனால் சாய் ஹோப் தனது நூறாவது போட்டியில் அடித்த சதத்தின் மூலம் சாதனையை படைத்துள்ளார்.
ஏற்கனவே அயர்லாந்து அணிக்கு எதிராக தனது ஐம்பதாவது ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்த சாய் ஹோப் 170 ரன்கள் அடித்த வேளையில், நூறாவது ஒருநாள் போட்டியிலும் 115 ரன்கள் குவித்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50-வது மற்றும் நூறாவது போட்டிகளில் சதம் அடித்த ஒரே வீரர் என்ற தனித்துவமான சாதனையை ஒருநாள் கிரிக்கெட்டில் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.