இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 319 ரன்களுக்கு ஆல் அவுட்
126 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
ராஜ்கோட்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித், ஜடேஜாவின் அபார சதம் மற்றும் அறிமுக வீரர் சர்பராஸ் கானின் அரை சதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது நாளில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 207 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடி சதமடித்து அசத்திய பென் டக்கெட் 133 ரன்களுடனும், ஜோ ரூட் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர் .
இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடக்கத்தில் ரூட் 18 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த ஜானி பேர்ஸ்டோ ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து பென் டக்கெட் , ஸ்டோக்ஸ் இருவரும் இணைந்து நிலைத்து ஆடினர். தொடர்ந்து பென் டக்கெட் 153 ரன்களிலும், ஸ்டோக்ஸ் 41 ரன்களிலும் வெளியேறினர்.பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் இங்கிலாந்து அணி 319 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட்டுகள், குல்தீப் யாதவ், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
தொடர்ந்து 126 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.