3-வது ஒருநாள் போட்டி : நிசாங்கா அபார சதம் - ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இலங்கை வெற்றி
இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
கொழும்பு,
இலங்கை - ஆஸ்திரேலியா இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா வெற்றியை பெற்றதால் தொடர் 1-1 என சமனடைந்த நிலையில், இன்று 3வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் வெறும் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான ஆரோன் பின்ச் பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். மிட்செல் மார்ஷ் 10 ரன்னில் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த ஃபின்ச் 62 ரன்னில் ஆட்டமிழந்தார். லபுஷேன் 29 ரன்கள் மட்டுமே அடித்தார்.
டிராவிஸ் ஹெட். ஹெட் 65 பந்தில் 70 ரன்கள்அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார். மேக்ஸ்வெல் 18 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 33 ரன்களை விளாச, 50 ஓவரில் 291 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி 292 ரன்கள் என்ற சவாலான இலக்கை இலங்கை அணிக்கு நிர்ணயித்தது.
இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக நிரோஷன் டிக்வெல்லா மற்றும் பதும் நிசாங்கா களமிறங்கினர். நிரோஷன் டிக்வெல்லா 25 ரன்களில் ஆட்டமிழக்க குசல் மெண்டிஸ் உடன் நிசாங்கா ஜோடி சேர்ந்தார். இருவரும் அற்புதமாக விளையாடி ரன்களை குவித்தனர், இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் திணறினர்.
சிறப்பாக விளையாடிய நிசாங்கா சதம் அடித்து அசத்தினார். 87 ரன்களில் குசல் மெண்டிஸ் ரீடையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். அபாரமாக விளையாடிய நிசாங்கா 137 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் இலங்கை அணி 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 48.3 ஓவர்களில் 292 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.