3-வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது.
கெய்ர்ன்ஸ்,
கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. அத்தொடரின் முதல் 2 ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், தொடரின் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தனது கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடும் பின்ச் மற்றும் ஜோஷ் இங்க்லிஸ் களம் இறங்கினர். தொடக்க ஜோடியினை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் உடனடியாக பிரித்தனர். இங்க்லிஸ் 10 ரன்னுக்கும், பின்ச் 5 ரன்னுக்கும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டம் இழந்தனர்.
இதையடுத்து 3-வது விக்கெட்டுக்கு ஸ்டீவ் ஸ்மித் மற்றும் லபுஸ்சேன் ஜோடி சேர்ந்தனர். நிதானமாக ஆடிய இந்த இணை 3-வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் லபுஸ்சேன் 52 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.
அடுத்து ஸ்மித்துடன் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஜோடி சேர்ந்தார். இந்த இணையும் மிகச்சிறப்பாக ஆடினர். நிதானமாக ஆடிய ஸ்மித் சதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 203 ஆக உயர்ந்த போது சதம் அடித்த ஸ்மித் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இறுதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் போல்ட் 2 விக்கெட்டும், டிம் சவுதி, லாக்கி பெர்குசன், சான்ட்னர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக பின் ஆலன் மற்றும் டேவன் கான்வே களமிறங்கினர். இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணியின் ஸ்கோர் 49 ஆக இருந்த போது கான்வே 21 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் கேன் வில்லியம்சன் களமிறங்கினார். கேமரூன் க்ரீன் பந்துவீச்சில் பின் ஆலன் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சீரான இடைவெளியில் நியூசிலாந்து வீரர்கள் கேன் வில்லியம்சன் (27 ரன்கள் ) டாம் லாதம் (10 ரன்கள்) டேரில் மிச்சேல் (16 ரன்கள்) விக்கெட்டை பறிகொடுத்தனர்.
பின்வரிசையில் கிளென் பிலிப்ஸ் சிறப்பாக விளையாடி 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இருப்பினும் மற்ற வீரர்கள் சோபிக்காத நிலையில் நியூசிலாந்து அணி 49.5 ஓவர்களில் 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது.
இதனால் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது.