ஒரே போட்டியில் 3 சூப்பர் ஓவர் - டி20 கிரிக்கெட்டில் நடைபெற்ற அரிய நிகழ்வு


ஒரே போட்டியில் 3 சூப்பர் ஓவர் - டி20 கிரிக்கெட்டில் நடைபெற்ற அரிய நிகழ்வு
x

Image Courtesy: @maharaja_t20

கர்நாடகாவில் தற்போது மகாராஜா டிராபிக்கான டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது.

பெங்களூரு,

தமிழகத்தில் டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் நடைபெறுவது போல் கர்நாடகாவில் தற்போது கர்நாடக கிரிக்கெட் சங்கம் நடத்தும் டி20 லீக் தொடர் (மகாராஜா டிராபி) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

இந்த தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் மயங்க் அகர்வால் தலைமையிலான பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியும், மணிஷ் பாண்டே தலைமையிலான ஹூப்ளி டைகர்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஹூப்ளி டைகர்ஸ் 20 ஒவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 164 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 165 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி 20 ஒவர்களில் 9 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக ஆட்டம் டை ஆனது. தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

இதில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு பிளாஸ்டர்ஸ் 10 ரன் எடுத்தது. தொடர்ந்து இலக்கை விரட்டிய ஹூப்ளி டைகர்ஸ் அணியும் 10 ரன் எடுத்ததால் ஆட்டம் மறுபடியும் டை ஆனது. இதையடுத்து 2வது சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஹூப்ளி டைகர்ஸ் 8 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 9 ரன் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியும் 8 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் மறுபடியும் டை ஆனது. இதையடுத்து 3வது சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

இதில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு பிளாஸ்டர்ஸ் 12 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 13 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஹூப்ளி டைகர்ஸ் அணி 13 ரன் எடுத்து பரபரப்பான ஆட்டத்தில் வெற்றி பெற்றது. டி20 கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 3 சூப்பர் ஓவர்கள் நடைபெற்றது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


Next Story