இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வங்காளதேச முன்னணி வீரர் விளையாடுவதில் சிக்கல்
இவருக்கு முதல் டெஸ்ட் போட்டியின்போது பும்ரா பந்துவீச்சில் காயம் ஏற்பட்டது.
கான்பூர்,
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 27-ம் தேதி கான்பூரில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் வங்காளதேச அணியின் முன்னணி வீரரான ஷகிப் அல் ஹசன் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதற்கான காரணம் என்னவெனில், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது பும்ரா பந்துவீச்சில் அவருக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை எடுத்து கொண்டு தொடர்ந்து விளையாடினார்.
ஆனால் போட்டிக்கு பின் நடத்திய பரிசோதனையில் அவருக்கு காயம் இன்னும் முழுமையாக சரியாகவில்லை. அதனால் அவர் 2-வது போட்டியில் களமிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து அணியின் மருத்துவக்குழு கண்காணிப்பில் உள்ளார். அடுத்த போட்டிக்கு இன்னும் 3 நாட்கள் உள்ளதால் காயத்தின் தன்மை பொறுத்து அவர் விளையாடுவாரா? இல்லையா? என்பதை வங்காளதேச அணி விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.