2-வது டெஸ்ட்: 196 ரன்களில் சுருண்ட இலங்கை.. வலுவான நிலையில் இங்கிலாந்து
இங்கிலாந்து - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
லண்டன்,
இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்ற நிலையில், 2-வது போட்டி நேற்று முன்தினம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.
அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 427 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன்களும், கஸ் அட்கின்ஷன் 118 ரன்களும் அடித்தனர். இலங்கை சார்பில் அதிகபட்சமாக அசிதா பெர்னாண்டோ 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 196 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கமிந்து மென்டிஸ் 74 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் அட்கின்சன், கிறிஸ் வோக்ஸ், மேத்யூ போட்ஸ், ஆலி ஸ்டோன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 231 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 25 ரன்கள் அடித்துள்ளது. பென் டக்கெட் 15 ரன்களுடனும், ஆலி போப் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து இதுவரை 256 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இத்தகைய சூழலில் இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறு உள்ளது.