2வது டெஸ்ட்; ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு - முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 162 ரன்களுக்கு ஆல் அவுட்


2வது டெஸ்ட்; ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு - முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 162 ரன்களுக்கு ஆல் அவுட்
x

Image Courtesy: AFP

ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

கிறைஸ்ட்சர்ச்,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் வெலிங்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 172 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லதாம், வில் யங் ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் யங் 14 ரன்னிலும், லதாம் 38 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து வீரர்கள் ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதில் வில்லியம்சன் 17 ரன், ரவீந்திரா 4 ரன், மிட்செல் 4 ரன், பிளெண்டல் 22 ரன், பிலிப்ஸ் 2 ரன், குகெலின் 0 ரன், ஹென்றி 29 ரன், சவுதி 26 ரன் எடுத்து அவுட் ஆகினர்.

இறுதியில் வெறும் 45.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 5 விக்கெட், ஸ்டார்க் 3 விக்கெட், கேமரூன் க்ரீன், கம்மின்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சை ஆட உள்ளது.


Next Story