2-வது டி20 கிரிக்கெட்: 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி


2-வது டி20 கிரிக்கெட்: 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
x

இந்திய அணியினரின் சிறப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலியா அணியினர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

திருவனந்தபுரம்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்கினர்.

இதில் முதலிலேயே அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 25 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் 53 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய இஷான் கிஷன் தனது அதிரடி பாணியிலேயே விளையாடி ரன்ரேட்டை குறையாமல் பார்த்துக்கொண்டார். அதிரடியாக விளையாடிய கிஷனும் 32 பந்துகளில் 52 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுபுறம் நிதானமாக விளையாடிய கெய்க்வாட் 58 ரன்கள் அடித்த நிலையில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் 9 பந்துகளில் 31 ரன்கள் அடித்தார். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் சார்பில் அதிகபட்சமாக நாதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதனைத்தொடர்ந்து 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணியின் சார்பில் ஸ்டீவன் சுமித் மற்றும் மேத்யூ ஷாட் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் மேத்யூ ஷாட் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜோஸ் இங்கிலிஸ் 2 ரன்களும், கிளைன் மேக்ஸ்வெல் 12 ரன்களும், சுமித் 19 ரன்களும், அதிரடி காட்டி வந்த டிம் டேவிட் 37 (22) ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

முறுமுனையில் தொடர்ந்து அதிரடி காட்டி வந்த ஸ்டோய்னிஸ் 45 (25) ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய அப்போர்ட் 1 ரன்னும், நாதன் எல்லீஸ் 1 ரன்னும், ஆடம் ஷாம்பா 1 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணியினரின் சிறப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

முடிவில் அதிரடி காட்டிய கேப்டன் மேத்யூ வேட் 42 (23) ரன்களும், தன்வீர் சங்கா 2 ரன்னும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 20 ஒவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ரவி பிஸ்னோய் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், அக்சர் பட்டேல், அர்ஷ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. மேலும் 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் 2-0 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.


Next Story