2-வது டி20; மேக்ஸ்வெல் அதிரடி சதம்...வெஸ்ட் இண்டீசுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அடிலெய்டு,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய மேக்ஸ்வெல் 55 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 8 சிக்சர்களுடன் 120 ரன்கள் குவித்து அசத்தினார். இறுதி கட்டத்தில் அவருடன் ஜோடி சேர்ந்த டிம் டேவிட்டும் அதிரடியாக விளையாடினார். 14 பந்துகளை சந்தித்த டிம் டேவிட் அதில் 31 ரன்கள் குவித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 241 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 242 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 120 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இறுதி வரை களத்தில் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஹோல்டர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.