2-வது டி20 போட்டி: 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி


2-வது டி20 போட்டி: 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி
x

Image Courtacy: CricketSouthAfricaTwitter

இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது.

கட்டாக்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டெல்லியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் 1 ரன்களில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஷ்ரேயஸ் அய்யர், இஷான் கிஷன் உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நோர்ட்ஜெ பந்துவீச்சில் கிஷன் ஆட்டமிழந்தார். அதன் பிறகு இந்திய அணி சரிவை நோக்கி சென்றது. கேப்டன் பண்ட் 5 ரன்களிலும், பாண்டியா 9 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இறுதி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் 21 பந்துகளில் 31 ரன்கள் குவித்து அதிரடி காட்ட இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது.

இதனைத்தொடர்ந்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில், ஹெண்டிரிக்ஸ் 4 ரன்களில் வெளியேற அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பிரிட்டோரியஸ் 4 ரன்களும் வாண்டர் டூ சென் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் பவுமா, கால்சென் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றது. இந்த ஜோடியில் பவுமா 35 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அதிரடி காட்டி வந்த கால்சென் 46 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 18.2 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் டேவிட் மில்லர் 20 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது.


Next Story