தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: 48 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: 48 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
x

image courtesy: Windies Cricket twitter

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

கிழக்கு லண்டன்,

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து நடந்த முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கிழக்கு லண்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 335 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஷாய் ஹோப் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். 128 ரன்கள் எடுத்த அவர் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ரோமன் பாவெல் 46 ரன்களும் நிக்கோலஸ் பூரான் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து, 336 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பொறுப்பாக ஆடினர். குயிண்டன் டி காக் 48 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் பவுமா சிறப்பாக ஆடினார். அதிரடியாக ஆடிய பவுமா 118 பந்தில் 144 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், தென் ஆப்பிரிக்கா 41.4 ஓவரில் 287 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ஷாய் ஹோப்புக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.


Next Story