2024 டி20 உலகக்கோப்பை தொடரில் அசத்தப்போகும் இந்திய வீரர் இவர்தான் - கெவின் பீட்டர்சன் கணிப்பு
2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
லண்டன் ,
2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.
அதன்படி அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா மற்றும் உகாண்டா ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்நிலையில், சவாலான வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் அனுபவத்தாலும் ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் போன்ற இளம் வீரர்கள் திறமையாலும் இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கப் போகும் வீரர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக அசத்தக்கூடிய வீரராக சுப்மன் கில் தான் இருப்பார் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
கரீபியன் மைதானங்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பார்படாஸ் ரசிகர்களுக்கு முன்னிலையில் 2010 டி20 உலகக்கோப்பையை நாங்கள் வென்றது சிறப்பு வாய்ந்ததாகும். இம்முறை உலகக்கோப்பைக்கு முன்பாக ஏப்ரல் - மே மாதங்களில் ஐபிஎல் நடைபெற உள்ளது.
எனவே அந்தத் தொடரில் அசத்தும் வீரர்கள் உலக கோப்பையில் கண்டிப்பாக ஜொலிப்பார்கள். சொல்லப்போனால் இந்தியாவில் இருக்கும் சூழ்நிலைகள்தான் வெஸ்ட் இண்டீஸிலும் இருக்கும். அங்கே, லோ பவுன்ஸ் மற்றும் லேசாக சுழலுக்கு சாதகமாக இருக்கக்கூடிய அழகான மைதானங்கள் இருக்கும். அத்தொடரில் இந்திய அணிக்காக சுப்மன் கில் அசத்துவார். அவர்தான் அந்த வீரர். இவ்வாறு அவர் கூறினார்.