2011 உலகக்கோப்பை: சொந்த மண்ணில் மகுடம் சூடிய இந்தியா..!


2011 உலகக்கோப்பை: சொந்த மண்ணில் மகுடம் சூடிய இந்தியா..!
x
தினத்தந்தி 30 Sept 2023 4:30 AM IST (Updated: 30 Sept 2023 6:20 AM IST)
t-max-icont-min-icon

28 ஆண்டுக்கு பிறகு 2-வது முறையாக உலகக் கோப்பையை சொந்த மண்ணில் இந்தியா உச்சிமுகர்ந்தது.

சென்னை,

10-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய ஆசிய நாடுகள் இணைந்து நடத்தின. முதலில் பாகிஸ்தானும் இந்த போட்டியை நடத்துவதில் கைகோர்ப்பதாக இருந்தது. ஆனால் 2009-ம் ஆண்டு அங்கு இலங்கை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தான் கழற்றி விடப்பட்டது.

2011-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரை நடந்த இந்த உலகக் கோப்பையில் பெர்முடா, ஸ்காட்லாந்து நீக்கப்பட்டு அணிகளின் எண்ணிக்கை 14 ஆக குறைந்தது.

முந்தைய உலகக் கோப்பை போட்டிகளில் கடைபிடிக்கப்பட்ட சூப்பர் சிக்ஸ், சூப்பர்8 முறைகள் தூக்கி எறியப்பட்டன. பெரிய அணிகள் தொடக்கத்திலேயே வெளியேறுவதை தவிர்ப்பதற்காக இந்த முறை அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டிருந்தது. நடுவர்களின் முடிவில் ஆட்சேபனை இருந்தால் அதை எதிர்த்து அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது.

சொந்த மண்ணில் டோனி தலைமையில் அடியெடுத்து வைத்த இந்திய அணி (பி பிரிவு) தனது முதல் ஆட்டத்திலேயே வங்காளதேசத்துக்கு எதிராக 4 விக்கெட்டுக்கு 370 ரன்கள் குவித்து வெற்றி பெற்று, முந்தைய உலகக் கோப்பையில் அடைந்த தோல்விக்கு வட்டியும் முதலுமாக பதிலடி கொடுத்தது.

இதன் பிறகு தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வியை தழுவிய இந்தியா மற்ற ஆட்டங்களில் நெதர்லாந்து, அயர்லாந்து, வெஸ்ட் இண்டீசை தோற்கடித்து கால்இறுதியை உறுதி செய்தது. இந்தியா- இங்கிலாந்து இடையே பெங்களூருவில் நடந்த திரில்லிங்கான ஆட்டம் சமனில் (இரு அணியும் தலா 338 ரன்) முடிந்தது. இதில் சச்சின் தெண்டுல்கர் சதம் (120 ரன்) அடித்தார்.

'ஏ' பிரிவில் அங்கம் வகித்த நடப்பு சாம்பியன் ரிக்கிபாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா தனது முதல் 5 லீக்கில் 4-ல் வெற்றி, ஒரு முடிவில்லை என்று உலகக் கோப்பை போட்டிகளில் தங்களது தோல்வியில்லா பயணத்தின் எண்ணிக்கையை 34 ஆக உயர்த்தியது. ஒரு வழியாக அவர்களின் வீறுநடைக்கு கடைசி லீக்கில் பாகிஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முட்டுக்கட்டை போட்டது. என்றாலும் ஆஸ்திரேலியா (9 புள்ளி) சிக்கலின்றி கால்இறுதியை எட்டியது.

கால்இறுதி ஆட்டங்களில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசையும், நியூசிலாந்து 49 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவையும், இலங்கை 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும் விரட்டின.

ஆமதாபாத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கால்இறுதியில் 261 ரன் இலக்கை இந்திய அணி தெண்டுல்கர் (53 ரன்), கம்பீர் (50 ரன்), யுவராஜ் சிங் (57 ரன்) ஆகியோரது அரைசதங்களின் உதவியுடன் 47.4 ஓவர்களில் எட்டிப்பிடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி தோற்கடித்தது 24 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் 1992-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக ஆஸ்திரேலியா இறுதிசுற்றுக்கு வர முடியாமல் மூட்டையை கட்டியது.

இதைத் தொடர்ந்து இந்திய அணி அரைஇறுதியில் பரம எதிரியான பாகிஸ்தானை மொகாலியில் எதிர்கொண்டது. இரு நாட்டு பிரதமர்களும் போட்டியை பார்க்க வருகை தந்த நிலையில் உச்சக்கட்ட டென்ஷனுக்கு மத்தியில் முதலில் பேட் செய்த இந்தியா 9 விக்கெட்டுக்கு 260 ரன்கள் சேர்த்தது. 6 முறை கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய தெண்டுல்கர் அதிகபட்சமாக 85 ரன்கள் எடுத்தார். அடுத்து களம் இறங்கிய அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 231 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. 29 ரன்கள் வித்தியாசத்தில் வாகை சூடிய இந்தியா, உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டது. இன்னொரு அரைஇறுதியில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

ஏப்ரல் 2-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், இலங்கையும் மல்லுக்கட்டின. உலகக் கோப்பை இறுதி சுற்றில் இரு ஆசிய அணிகள் நேருக்கு நேர் சந்தித்தது இதுவே முதல் முறையாகும். 'டாஸ்' போடப்பட்ட போது இலங்கை கேப்டன் சங்கக்கரா என்ன கேட்டார் என்பது சரியாக காதில் விழவில்லை என்று நடுவர் கூறியதால் 2-வது முறையாக 'டாஸ்' போட்ட வினோதம் அரங்கேறியது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்தது. மஹேலா ஜெயவர்த்தனே சதம் (103 ரன்) விளாசினார். அடுத்து ஆடிய இந்திய அணியில் ஷேவாக் (0), தெண்டுல்கர் (18 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. இதன் பின்னர் கவுதம் கம்பீர் (97 ரன்), விராட் கோலி (35 ரன்) அணியை சரிவில் இருந்து மீட்டனர். மிடில் வரிசையில் களம் புகுந்து விசுவரூபம் எடுத்த கேப்டன் டோனி அதிரடி ஜாலத்தால் மைதானத்தை உற்சாக வெள்ளத்தில் குலுங்க வைத்ததுடன் இறுதியில் தனக்கே உரிய பாணியில் பிரமாதமான ஒரு சிக்சருடன் இலக்கை எட்ட வைத்தார். இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 277 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது, 28 ஆண்டுக்கு பிறகு 2-வது முறையாக இந்தியா உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்தது. இறுதி ஆட்டத்தை உலகம் முழுவதும் ஏறக்குறைய 56 கோடி பேர் பார்த்து ரசித்தனர். 91 ரன்களுடன் (79 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்த டோனி ஆட்டநாயகன் விருதை பெற்றார். ஆல்-ரவுண்டராக ஜொலித்த யுவராஜ்சிங் (1 சதம், 4 அரைசதம் உள்பட 362 ரன் மற்றும் 15 விக்கெட்) தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

1989-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்த இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் உலகக் கோப்பை கனவு 22 ஆண்டுக்கு பிறகு நனவானது. உலகக் கோப்பையை கையில் ஏந்திய போது ஆனந்த கண்ணீர் விட்ட தெண்டுல்கர், வெற்றியை விடிய விடிய சக வீரர்கள், குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தார். தெண்டுல்கருக்கு இது 6-வது உலகக் கோப்பையாகும். இதன் மூலம் அதிக உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றவரான ஜாவித் மியாண்டட்டின் (பாகிஸ்தான்) சாதனையை சமன் செய்தார். 2 சதம் உள்பட 482 ரன்கள் எடுத்த தெண்டுல்கருக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை போட்டியாக அமைந்தது.

இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 24 சதங்கள் பதிவாகின. அதில் ஒரு சதம் விசேஷமானது. இங்கிலாந்துக்கு எதிரான லீக்கில் அயர்லாந்து வீரர் கெவின் ஓ பிரையன் 50 பந்துகளில் 13 பவுண்டரி, 6 சிக்சருடன் சதம் அடித்து வியக்க வைத்தார். உலகக் கோப்பையில் அதிவேக சதம் இதுவாகும். அவரது தடாலடியான செஞ்சூரியால் அயர்லாந்து 328 ரன்கள் இலக்கை 5 பந்து மீதம் வைத்து விரட்டிப்பிடித்து அசத்தியது. ஆனாலும் அயர்லாந்தால் அடுத்த சுற்றை எட்ட முடியவில்லை.


Next Story