20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை: மந்தனா 3-வது இடத்தில் நீடிப்பு ரிச்சா கோஷ், ரேணுகா சிங் முன்னேற்றம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்டர்களின் தரவரிசையில் டாப்-5 இடங்களில் மாற்றமில்லை.
20 ஓவர் உலகக் கோப்பையில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 87 ரன்கள் விளாசிய இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா கூடுதலாக 9 புள்ளிகளை சேகரித்து மொத்தம் 731 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் தாலியா மெக்ராத் (802 புள்ளி) முதலிடத்திலும், பெத் மூனி (755 புள்ளி) 2-வது இடத்திலும், மெக் லானிங் 4-வது இடத்திலும் (694 புள்ளி) உள்ளனர்.
தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிச்சாகோஷ் கிடுகிடுவென 16 இடங்கள் முன்னேறி 20-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும். மற்ற இந்திய வீராங்கனைகள் ஷபாலி வர்மா 10-வது இடத்திலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 12-வது இடத்திலும், ஹர்மன்பிரீத் கவுர் 13-வது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டன் 'நம்பர் ஒன்' ஆக வலம் வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் 7 இடங்கள் உயர்ந்து 5-வது இடத்தை பெற்றுள்ளார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும். இந்திய சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா 4-வது இடத்தில் தொடருகிறார்.