பிரபல கிரிக்கெட் வீரரை தாக்கிய வழக்கில் சப்னா கில்லுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்
செல்பி விவகாரத்தில் பிரபல கிரிக்கெட் வீரரை தாக்கிய வழக்கில் சப்னா கில்லுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருந்தவர் பிரித்வி ஷா. கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபரில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த (134 ரன்) இந்திய இளம் வீரர் என்ற சாதனையை பெற்றார்.
மும்பையை சேர்ந்த இவர், சையது முஸ்தாக் அலி 20 ஓவர் போட்டியில் கலந்து கொண்டபோது அவரது சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில் அவர் தடை செய்யப்பட்ட டெர்புடாலின் என்ற ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரிய வந்தது.
எனினும், இருமலுக்கு மருந்து எடுத்து கொண்ட போது கவனக்குறைவு காரணமாக இந்த தவறு நடந்து விட்டது என பிரித்வி ஷா விளக்கம் அளித்து உள்ளார். இதனை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டது. அதனால் அவர் பெரிய தண்டனையில் இருந்து தப்பினார்.
எனினும், பிரித்வி ஷா அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாட 8 மாதம் தடை விதித்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில், செல்பி எடுக்க மறுப்பு தெரிவித்தனர் என கூறி பிரித்வி ஷா மற்றும் அவரது நண்பரை 8 பேர் கொண்ட குழு கடுமையாக தாக்கினர் என கூறப்படுகிறது.
சமூக ஊடகத்தில் பிரபல நபராக அறியப்படும் சப்னா கில் என்ற இளம்பெண்ணுடன் சென்ற நண்பர், இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவுடன் செல்பி எடுக்க முயன்று உள்ளார். இதில் நடந்த மோதலில் பிரித்வி ஷா தாக்கப்பட்டார் என கூறப்படுகிறது.
பிரித்வி ஷா, அவரது நண்பர் ஆஷிஷ் சுரேந்திர யாதவ் ஆகியோர் மும்பையில் ஓஷிவாரா போலீசில் புகார் அளித்தனர். அதில் ஆஷிஷ், தனது காரை பேஸ்பால் மட்டையை கொண்டு தாக்கினர். காரை பின்தொடர்ந்து வந்து ரூ.50 ஆயிரம் பணம் தர வேண்டும் என்றும் இல்லை என்றால், பொய்யான வழக்கு பதிவு செய்வோம் என மிரட்டினர் என புகாரில் தெரிவித்து உள்ளார்.
இந்த வழக்கில் சப்னா உள்பட 8 பேரை ஓஷிவாரா நகர போலீசார் கைது செய்தனர். சப்னா கில் மற்றும் 3 பேருக்கு இன்று 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.
சாந்தாகுரூஸ் நகரில் உள்ள பிரபல 5 நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஓட்டலில் நண்பருடன் உணவு சாப்பிட சென்ற இடத்தில், குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களில் சிலர் பிரித்வியுடன் செல்பி எடுக்க முயன்று உள்ளனர்.
முதலில், 2 பேருடன் செல்பி எடுக்க பிரித்வி ஒப்பு கொண்டார். பின்னர் மீண்டும் வந்து மற்றொரு செல்பி எடுக்க கேட்டுள்ளனர். ஆனால், நண்பருடன் சாப்பிட வந்திருக்கிறேன் என கூறி முடியாது என்று கூறியுள்ளார்.
இதன்பின் பிரித்வியின் நண்பர் மேலாளரை தொடர்பு கொண்டு புகார் அளித்து உள்ளார். இதில், மோதல் ஏற்பட்டு உள்ளது. எனினும், பிரித்வி கம்பு ஒன்றை எடுத்து வந்து, தன்னையும், நண்பர்களையும் சாலையில் அடிக்க முயற்சித்து உள்ளார் என சப்னாவும் பதிலுக்கு கூறியுள்ளார்.