5 வருடங்களில் 100 சதங்கள் - விராட், ரோகித் உடனான பயணம் குறித்து நினைவு கூர்ந்த தவான்


5 வருடங்களில் 100 சதங்கள் - விராட், ரோகித் உடனான பயணம் குறித்து நினைவு கூர்ந்த தவான்
x

விராட், ரோகித்துடன் தனது பயணம் அழகாக இருந்தது என்று தவான் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இடது கை பேட்ஸ்மேனான ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இன்று ஓய்வை அறிவித்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த அவர் 2010-ம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமாகி ஆரம்பக் காலங்களில் தடுமாறிக் கொண்டிருந்தார்.

அப்போது அவரை 2013 சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் சர்மாவுடன் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தொடக்க வீரராக களமிறக்கினார். அந்த வாய்ப்பை பிடித்துக்கொண்ட ஷிகர் தவான் தங்க பேட் விருது வென்று 2013 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்ல உதவினார். அப்போதிலிருந்து ஐசிசி தொடர்களில் அபாரமாக விளையாடிய அவர் 2019 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காயத்துடன் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து வெளியேறினார்.

அவர் காயத்திலிருந்து குணமடைந்த பின் அதிரடியாக விளையாடத் தடுமாறினார். அதன் காரணமாக இந்திய அணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி விடப்பட்ட அவருக்கு போட்டியாக தற்போது ஜெய்ஸ்வால் போன்ற பல இளம் கிரிக்கெட் வீரர்கள் வந்துள்ளனர். அதனால் தற்போது வருங்காலத்தை கருத்தில் கொண்டு 38 வயதில் ஓய்வு பெறுவதாக தவான் அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு சோகமாக அமைந்தது.

இந்நிலையில் 2013 - 2019 காலகட்டங்களில் உலக கிரிக்கெட்டில் விராட் கோலி (49), ரோகித் சர்மா (31), தவான் (23) ஆகியோர் மொத்தமாக 103 சதங்கள் விளாசி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தனர். அந்தக் காலங்களை மறக்க முடியாது என்று தெரிவிக்கும் தவான் அது பற்றி நினைவு கூர்ந்தது பின்வருமாறு:-

"சஞ்சய் பங்கர், விக்ரம் ரத்தோர், ராகுல் டிராவிட், ரவி சாஸ்திரி போன்ற நிறைய பயிற்சியாளர்கள் எனது கெரியரில் அங்கமாக இருந்தனர். அவர்கள் அனைவருடனும் இணைந்து வேலை செய்ததற்கு நன்றி உடையவனாக இருக்கிறேன். விராட், ரோகித்துடன் எனது பயணம் அழகாக இருந்தது. விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் நான் சேர்ந்து 5 வருடங்களில் 100 சதங்கள் அடித்தது இன்னும் தெளிவாக நினைவில் இருக்கிறது. அப்போது ரவி சாஸ்திரி எங்கள் பயிற்சியாளராக இருந்தார். நான் காயத்தை சந்தித்தபோது என்.சி.ஏ மற்றும் பிசிசிஐ மீண்டு வர முக்கிய காரணமாக இருந்தார்கள். அவர்களுக்கும் நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன்" என்று கூறினார்.

1 More update

Next Story