டைல்ஸ் வீட்டிற்கு முக்கியத்துவமும் அழகும்


டைல்ஸ் வீட்டிற்கு முக்கியத்துவமும் அழகும்
x

புதிதாக கட்டும் வீடானாலும் சரி புதுப்பிக்கும் வீடானாலும் சரி வீட்டிற்கு அழகு சேர்க்க முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய ஒன்று தரைகள். தரைகளுக்கு நாம் தேர்ந்தெடுக்கும் டைல்ஸ்கள்.

இயற்கை அளித்துள்ள கற்களில் தயாரிக்கப்படும் டைல்ஸ்கள் மற்றும் மனிதனின் அறிவியல் தொழில்நுட்பத்தின் காரணமாக இயற்கையோடு போட்டியிடும் அளவிற்கு உன்னதமாக தயாரிக்கப்படும் டைல்ஸ்கள் ஆனாலும் சரி, சந்தையில் பல வடிவங்களிலும் வண்ணங்களிலும் கொட்டி கிடக்கின்றன. அவற்றில் நாம் தேர்ந்தெடுக்கக்கூடிய சில டைல்ஸ்களை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

டைல்ஸ் உபயோகிப்பதற்கான காரணங்கள்

* வீட்டின் அழகையும் தோற்றத்தையும் மேம்படுத்துகிறது.

* தரையில் மற்றும் சுவர்களில் ஏற்படும் ஈரப்பதத்தையும் மாசுக்களையும் நீக்கி வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்கிறது.

* சமையலறை கழிவறை போன்ற இடங்களில் தோன்றும் அழுக்குகளையும் கரைகளையும் தவிர்க்க உதவுகிறது.

* சோப் மற்றும் தண்ணீர் கொண்டு சுலபமாக சுத்தப்படுத்த முடிகிறது

* குறைவான பராமரிப்பும் ஓர் இடத்தில் பிரச்சனை ஏற்படும் பொழுது மாற்றுவதும் சுலபமாக இருக்கிறது.

* டைல்ஸ்களின் நீடித்த உழைப்பும் தரமும் சிறப்பாக இருக்கிறது.

* நடப்பதற்கு மென்மையாகவும் வசதியாகவும் இருக்கிறது.

டைல்ஸ்களின் வகைகள்

செராமிக் டைல்ஸ்

பல வீடுகளில் இந்த டைல்ஸ் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. வீட்டின் எல்லா அறைகளிலும் இதை உபயோகப்படுத்தலாம். குறிப்பாக சமையலறை வீட்டின் முன்புற வாசல், கழிவறை போன்ற இடங்களில் செராமிக் டைல்ஸ் உபயோகிப்பது வசதியானதாக இருக்கும். இது நியாயமான விலைகளிலும் பொருளாதார சூழல் சிரமமாக இருப்பவர்களுக்கும் ஏற்புடையதான விலைகளில் கிடைக்கிறது. இதில் பளபளப்பு அதிகமாக இருக்கக்கூடிய க்ளேஸ்டு டைல்ஸ்களும் பளபளப்பு இல்லாத அன்க்லேஸ்ட் டைல்ஸ்களும் என்று இரண்டு வகைகளில் இருக்கும்.

கிளாஸ் டைல்ஸ்:

இந்த டைல்ஸ் நிறைய இடங்களில் பயன்படுத்தப்படாதது என்றாலும் இந்த டைல்ஸ்களுக்கான தனித்துவமான விஷயங்கள் நிறைய உண்டு. இது கரைகள் படியாதது. இது இயற்கையான கற்களை போன்ற தோற்றத்தை கொண்டதாக இருக்கும். அழகான தோற்றம் கொண்டவைகள் இந்த கிளாஸ் டைல்ஸ்கள். இந்த டைல்களை மேடைகள் மாடங்கள் சற்றே உயரமான பூஜை மாடங்கள் போன்ற இடங்களில் பயன்படுத்துவது மிக அழகாக இருக்கும். கிளாஸ் டைல்ஸ்களை சமையலறை மற்றும் கழிவறைகளில் உபயோகிப்பது சற்றே சிரமம் தான்.

சிமெண்ட் டைல்ஸ்:

இந்த காலகட்டத்தில் சிமென்ட் டைல்ஸ்களுக்கு வரவேற்பு அதிகம் என்று சொல்லலாம். பல கட்டிடக்கலைஞர்களும் பொறியாளர்களும் சிமெண்ட் டைல்ஸ்களை பரிந்துரைக்கின்றனர். சிமெண்ட் டைல்ஸ்கள் இயற்கையில் அதிக மெல்லிய துளைகள் கொண்டவைகள். இவற்றில் பல நிறங்களிலும் வடிவங்களிலும் டிசைன்களிலும் கிடைக்கின்றன. இவற்றை மீண்டும் மீண்டும் பாலிஷ் செய்து உபயோகிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. இந்த டைல்ஸ்களை தரைகளில் அமைப்பது சற்றே சிரமமானதாக இருக்கலாம். ஆனால் ஒருமுறை இவற்றை பதித்து விட்டால் பிறகு இவற்றின் உபயோகம் நீடித்து உழைக்கக் கூடியது.

மார்பிள் டைல்ஸ்:

மார்பிள் டைல்ஸ்கள் வீட்டின் அழகை பிரத்தியேகமாக காட்டக் கூடியவை இந்த மார்பிள் டைல்ஸ்களை சமையலறை கழிவறைகளில் கூட உபயோகப்படுத்தலாம். மற்ற டைல்ஸ்களை விட இந்த டைல்ஸ்கள் சற்றே விலை கூடுதலாக இருக்கும். இவற்றின் வண்ணங்களும் வடிவங்களும் பிரத்தியேகமாகவும் தனித்தன்மை கொண்டதாகவும் இருப்பதால் வீட்டின் அழகை நளினமாக காட்டக் கூடியவையாக இந்த டைல்ஸ் கள் விளங்குகின்றன. இந்த டைல்ஸ்களை வீட்டில் உள்ள தூண்கள் மேடைகள் போன்றவற்றிலும் கூட பதிக்கலாம்.

கிரானைட் டைல்ஸ்:

கிரானைட், மார்பிள் போன்ற இயற்கை டைல்ஸ் ஆகும். இது மார்பிள்களுடன் ஒப்பிடும்போது விலை சற்றே குறைவு. இது அதிகமான பளபளப்புடன் பார்க்க மிகவும் நேர்த்தியாக இருக்கும். சமையலறை மேடைகள் போன்ற இடங்களுக்கு கிரானைட் ஸ்லாப்புகளை உகந்தவையாக இன்றளவில் இருக்கின்றன.

மொசைக் டைல்ஸ்:

மொசைக் டைல்ஸ் பல நிறங்களிலும் வடிவங்களிலும் அளவுகளிலும் டிசைன்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு டைல்ஸ் வகையாகும். இவற்றை வீட்டில் பொருத்தும் போது மிக அழகான தோற்றத்தையும் பளபளப்பையும் வழங்கும். சரியான முறையில் பராமரிக்கப்படும் மொசை டைல்ஸ்கள் நீடித்து உழைக்கக் கூடியவை. 30 40 வருடங்கள் ஆனாலும் பளப்பாக இருக்கும். பளபளப்பு குறைந்தாலும் மீண்டும் பாலிஷ் போட்டுக்கொள்ளலாம்.

மெட்டல் டைல்ஸ்:

உலோகத்தினால் ஆன இந்த டைல்ஸ்கள் மிகவும் ஆடம்பரமான நவீன தோற்றத்தை வீட்டிற்கு அளிக்கக் கூடியது. மெட்டல் டைல்ஸ்கள் அதிக பராமரிப்பு தேவைப்படும் ஒரு வகையாகும். இவற்றை சமையலறை மேடைகளிலும் சமையலறை தரைகளிலும் உபயோகப்படுத்துவது சிறந்தது. இவற்றில் சிராய்ப்புகளும் கறைகளும் ஏற்படலாம் என்பதால் இவற்றை மிகுந்த கவனத்தோடு பராமரிக்க வேண்டும். கழிவறைகளில் இந்த டைல்ஸ் உபயோகப்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டியது. இப்படி டைல்ஸ்களில் பல வகைகள் இருப்பதால் அவரவரின் தேவை நிதி நிலைமை பராமரிப்புத் திறன் அழகுணர்ச்சி போன்றவற்றை கருத்தில் கொண்டு வீடுகளுக்கு ஏற்ற டைல்ஸ்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.


Next Story