ஜென் தோட்டம் அமைப்போம்! மனதை அமைதிபடுத்துவோம்!!
ஜென் தோட்டம் அல்லது உலர் தோட்டம் என்பது ஜப்பானிய கோவில்களிலும் புத்த கோவில்களிலும் காணப்படும் தோட்டமாகும். இந்தத் தோட்டங்களில் அமர்ந்திருக்கும் பொழுது மனம் மிகவும் தளர்ச்சியாகவும், அமைதியாகவும், ஆழ்ந்த சிந்தனைகளில் ஈடுபடுவதற்கும், அறிவு முதிர்ச்சியில் தேர்வதற்கும், தியானம் செய்வதற்கும் ஏற்றதாக இருக்கிறது.
ஜென் தோட்டம் என்றால் என்ன
ஜென் தோட்டம் என்பது இயற்கையான பொருட்களான மலை கற்கள், சிறு பாறைகள், மணல், கருங்கற்கள், புல் வெளி மற்றும் செடிகள், தண்ணீர் போன்றவை மிகக் குறைவான அளவில் இருக்கக்கூடிய ஒரு அமைதியான வெளிச்சம் குறைவான இடமாகும். இந்த மாதிரியான தோட்டங்கள் ஜப்பானிய புத்த கோவில்களில் மட்டுமின்றி சீனா இந்தியா மற்றும் அமெரிக்காவிலும் கூட பல இடங்களில் அமைக்கப்படுகிறது. இயற்கையின் தூய்மையையும் அழகையும் பிரதிபலிக்கும் இந்த ஜென் தோட்டம் தியானம் செய்வதற்கு அற்புதமான ஒரு இடமாக அமைகிறது.
நம் வீடுகளில் ஜென் தோட்டம் எப்படி அமைக்கலாம்
* இந்த ஜென் தோட்டத்தை நம் வீட்டின் பின்புறம், வீட்டின் முன் பகுதியில் உள்ள போர்டிகோ போன்ற இடங்களில், மொட்டை மாடியில் மற்றும் வீடுகளின் உட்புறங்களில் பால்கனி போன்ற இடங்களிலும் கூட அமைக்கலாம். அந்த மாதிரியான ஒரு இடத்தை முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
* பொதுவாக ஜென் தோட்டத்திற்கு ஏற்ற செடி என்பது மூங்கில் பிரதானமாக உபயோகப்படுத்தப்படுகிறது. இதை தவிர மிகவும் குறைவான பராமரிப்பு தேவைப்படும் பசுமையான செடிகளையும் தேர்ந்தெடுக்கலாம். காக்டஸ் போன்ற செடிகளையும் பயன்படுத்தலாம். இந்த தோட்டத்தில் நம் கவனம் நம் மனதை அமைதி படுத்திக் கொள்ளவும் தளர்த்திக் கொள்ளவும் மட்டுமே இருக்க வேண்டுமே ஒழிய அந்த இடத்தை பராமரிப்பதில் அதிக கவனம் போகாத வகையில் தோட்டத்தை அமைக்க வேண்டும்.
* அடுத்து தண்ணீர் ஓடுவது போன்ற மெல்லிய ஆறு போலவோ, அல்லது ஃபவுண்டென் போலவோ, பாறைகளில் வழிந்து ஓடுவதைப் போலவோ, பாறைகளையும் கற்களையும் மணல்களையும் கொண்டு இயற்கையான நீர்வீழ்ச்சி போலவோ, ஆறு போலவோ அமைக்கலாம். இந்த நீரின் ஓட்டம் லேசான சலசலப்பை அந்த இடத்தில் ஒலிக்கச் செய்து கொண்டு இருக்கும். இந்த ஓசையின் மேல் மனதை வைத்தும் நாம் தியானம் செய்யலாம்.
* கற்கள் சிறு பாறைகள் மணல் போன்றவை ஸ்திரத்தன்மையையும் உறுதியையும் பிரதிபலிக்கக் கூடியதாக இருப்பதால் இவற்றை ஜென் தோட்டத்தில் முக்கியமாக அமைக்கிறார்கள்.
* இந்த இடத்தில் புத்தரின் சிலையை வைப்பது பொருத்தமானதாக இருக்கும். புத்தர் சிலை இல்லாமல் நம் விருப்பத்திற்கு ஏற்ப வேறு சிலைகளையும் கூட அமைக்கலாம்.
* மிக மெல்லிய ஒலியை காற்றின் அசைவிற்கு ஏற்ப ஏற்படுத்தும் மூங்கில்களால் ஆன விண்ட் சைம் உபயோகப்படுத்துவதும் இந்த இடத்தில் மிக மெல்லிய ஒலியை ஏற்படுத்தி இந்த தோட்டத்திற்கு ஒரு நேர்மறையான அதிர்வலைகளை ஏற்படுத்தும்.
இம்மாதிரி அமைக்கப்படும் ஜென்தோட்டத்தில் அமர்ந்து தியானம் செய்வது ஓய்வெடுப்பது கண்களை மூடி சிந்தனை செய்வது பாட்டுக்கள் கேட்பது மற்றும் புத்தகம் படிப்பது போன்ற எந்த செயல்களை நாம் செய்யும் பொழுதும் மனதில் நேர்மறையான உணர்வுகளும் அற்புதமான சிந்தனை சக்தியும் ஆக்கத் திறனும் அமைதியும் வெளிப்படும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்