தரையை அலங்கரிக்கும் தரைவிரிப்புகள்


தரையை அலங்கரிக்கும் தரைவிரிப்புகள்
x

வீட்டை அலங்கரிக்கும் அலங்காரப் பொருட்களில் ஒன்றாகவே பழங்காலம் தொட்டு தரைவிரிப்புகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.தரை விரிப்புகள் ஆரம்ப காலகட்டங்களில் குளிர்ச்சியான காலநிலைகளில் வீட்டினுள் உட்காருவதற்கும்,படுப்பதற்கும் வெதுவெதுப்பான சூழ்நிலையைத் தருவதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. பின்னர் காலப்போக்கில் இவை வீட்டின் தரையை அலங்கரிக்கும் அலங்காரப் பொருளாக மாறிவிட்டன.இவற்றை தரைவிரிப்புகள் என்று சொல்வதைவிட கம்பளங்கள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

இந்த தரைவிரிப்புகளில் ஏராளமான வகைகள் இருக்கின்றன.அவை :

*முடிச்சு விரிப்புகள்(நாட்டட் ரக்ஸ்) : பட்டு, பருத்தி, கம்பளி மற்றும் பல பொருட்களை பயன்படுத்தி ஒரு வடிவத்தை உருவாக்குவதற்காக ஒரு சிறப்பு வகை தறியால் செய்யப்படுவது இவ்வகை முடிச்சு விரிப்புகள் ஆகும்.இவை தோற்றத்தில் மிகவும் அழகாக இருப்பதுடன் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டவையாகவும் இருக்கின்றன.இவற்றில் பெரும்பாலான முடிச்சு வகை விரிப்புகள் கைகளால் செய்யப்படுகின்றன.முடிச்சு இல்லாத கம்பளத்துடன் ஒப்பிடும்போது இந்த முடிச்சு வகை விரிப்பு பொதுவாக மிகவும் விரிவானதாக இருக்கின்றது.நம் பராமரிப்பை பொருத்து இவை இருபது வருடங்களுக்கும் மேலாக ஆயுள் கொண்டவையாக இருக்கின்றன.

*ஷாக் விரிப்புகள் : இந்த ஷாக் வகை விரிப்பு அல்லது கார்பெட் க்ரூவி தசாப்தத்தில் உருவானது என்ற பெருமைக்குரியதாகும்.இந்த விரிப்பின் தனித்துவமான தோற்றம் மற்றும் அமைப்பு ஒரு வீட்டிற்கு அழகு சேர்ப்பதாக இருக்கின்றது. இதன் மென்மையான அமைப்பு இதன் மீது நடக்கும் பொழுது ஒரு இனிமையான உணர்வை தருவதுடன் குளிர்ந்த கால நிலைகளுக்கு மிகவும் ஏற்ற விரிப்பாகவும் விளங்குகின்றது.

*பின்னல் விரிப்புகள்(பிரைட்டட் ரக்ஸ்) : இந்த விரிப்புகள் பலவிதமான துணிகளையும் உபயோகப்படுத்தி செய்யப்படுகின்றன.இவை பார்ப்பதற்கு முடியை ஜடை பின்னி இருப்பது போல துணிகளில் பின்னப்பட்டு வருவதால் ஜடை விரிப்புகள் என்ற பெயரை பெற்றிருக்கின்றன.ஒரு காலகட்டத்தில் அமெரிக்காவில் மிகவும் பிரபலமான இந்த தரைவிரிப்புகள் இப்பொழுது உலகம் முழுவதும் பிரபலமடைந்து விட்டன.வட்ட வடிவம், செவ்வக வடிவம் என பல வடிவங்களில் வண்ணமயமாகவும் தனித்துவமாகவும் இந்த பின்னல் விரிப்புகள் இருக்கின்றன.

*கொக்கி விரிப்புகள் (ஹூக்டு ரக்ஸ்): இணைக்கப்பட்ட நூல் மற்றும் இதற்கென பிரத்தியேகமாக பயன்படுத்தப்படும் ஹூக் இவற்றைக் கொண்டு இந்த விரிப்புகள் தயாரிக்கப்படுகின்றன.மிகவும் மென்மையாகவும், புடைப்புகளுடனும்,பழமையான தோற்றத்துடனும் விளங்கும் இந்த வசீகரமான விரிப்புகள் அழகிய தோற்றத்தைத் தருவதாக இருக்கின்றன.

*இயற்கைஇழை விரிப்புகள்(நேச்சுரல் ஃபைபர் ரக்ஸ்): தட்டையான நெசவில் ஆர்கானிக் தோற்றத்தையும், நடுநிலை அமைப்பையும் கொடுக்கக்கூடியதாக விளங்கும் இந்த விரிப்புகள் வீட்டிற்கு எழிலான தோற்றத்தைத் தருகின்றன.

*கம்பளி விரிப்புகள்: விரிப்புகள் தயாரிப்பதில் மிகவும் பிரபலமான பொருளாக கம்பளிகள் விளங்குகின்றன.இவை கதகதப்பு மற்றும் வசதியை தருவதுடன் செம்மறி ஆட்டின் ரோமத்தாலானான சூழல் நட்பு பொருளால் தயாரிக்கப்படுவதால் மிகவும் சிறப்புவாய்ந்த விரிப்புகளாக மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.இந்த கம்பளி விரிப்புகள் குறைந்தபட்சம் 60 ஆண்டுகள் வரை நீடித்து உழைப்பவையாக இருக்கின்றன.எவ்வளவு ஆண்டுகள் உபயோகப்படுத்தினாலும் அவற்றின் வடிவம் மாறாமல் இருப்பதுடன் , நடப்பதற்கும் உட்காருவதற்கும் மிகவும் மென்மையாகவும் இருக்கின்றன.

*பட்டு விரிப்புகள் : மிகவும் நேர்த்தியான, கலைப்படைப்புகளை உருவாக்குவதற்கு ஏற்றார்போல் மென்மையாக விளங்கும் பட்டினால் தயாரிக்கப்படும் இந்த விரிப்புகள் ஆடம்பரமான தோற்றத்தைத் தருகின்றன.மற்ற விரிப்புகளை தயாரிப்பதற்கு ஆகும் காலத்தைவிட பட்டு விரிப்புகளை தயாரிப்பதற்கு அதிக நாட்கள் தேவைப்படுகிறது. முறையான பராமரிப்பு இந்த விரிப்புகளுக்கு வழங்கப்படும்போது அவை கம்பளி விரிப்புகளை விட அதிக காலம் நீடித்து உழைப்பவையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

*பருத்தி விரிப்புகள் : எண்ணற்ற வண்ணங்கள், வடிவமைப்பு மற்றும் நெசவு செய்யும் முறை போன்ற மாறுபாடுகளை கொண்டுவரும் இந்த பல்துறை விரிப்புகள் பெரும்பாலும் வீட்டின் வரவேற்பறை, படுக்கையறை, சாப்பாட்டு அறை மற்றும் சமையலறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.இந்த விரிப்புகளை சுத்தம் செய்வதும், பராமரிப்பதும் மிகவும் எளிது. அதேபோல் இந்த விரிப்புகளை வாஷிங் மெஷின்களில் துவைத்து எடுத்துக்கொள்ளலாம்.

*பவர்லூம் விரிப்புகள்: இவ்வகை விரிப்புகள் செயற்கை இழைகள், கம்பளி, நைலான், அக்ரிலிக்சில்க், ஆர்ட் சில்க், பாலியஸ்டர்,பாலிப்ரொப்பிலீன் போன்ற பல்வேறு பொருட்களால் விசைத்தறிகளில் பெரிய இயந்திரங்களைக் கொண்டு விரைவாக தயாரிக்கப்படுகின்றன.விசைத்தறி களில் அதிக அளவில் தயாரிக்கப்படும் இந்த விரிப்புகள் குறைந்த நேரத்தில், குறைந்த செலவில் தயாரிக்கப்படுவதால் கைகளால் தயாரிக்கப்படும் விரிப்புகளுடன் ஒப்பிடும்போது குறைந்த விலை கொண்டவையாக இருக்கின்றன. இவை குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டவையாக விளங்கு கின்றன.

*டஃப்ட் விரிப்புகள்: ஹேண்ட்- ஹெல்ட் ட்ரில் கன்னைக் கொண்டு கையால் நெய்யப்படும் இந்த விரிப்புகள் மிகவும் நேர்த்தியான வேலைப்பாட்டுடன் விளங்குகின்றன.அதிக வேலைப்பாடுகளைக் கொண்டு செய்யப்படும் இந்த விரிப்புகள் மிகவும் அழகிய வண்ணங்கள் மற்றும் டிசைன்களில் வருகின்றன.ஹேண்ட்- ஹெல்ட் ட்ரில் கன்னைக் கொண்டு கைகளால் தயாரிக்கப்படுவதால் ஒரு நாளிலேயே இந்த விரிப்பினைத் தயாரித்து விட முடியும்.

*கைத்தறி விரிப்புகள்: கைகளால் நெய்யப்படும் இவை கைத்தறி விரிப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. விரிப்புகளின் அளவைப் பொறுத்து ஒன்று முதல் நான்கு நபர்கள் வரை இந்த விரிப்புகளை நெய்வதற்கு ஆட்கள் தேவைப்படுவார்கள்.பல்துறை தயாரிப்பான இவை கைகளால் நெய்யப்படுவதால் அதிக ஆயுள் கொண்டவையாக இருக்கின்றன. இவற்றை சுத்தம் செய்வதும், பராமரிப்பதும் எளிதானது. அதேபோல் சிறந்த மறுவிற்பனை மதிப்பையும் இவை கொண்டிருக்கின்றது.

*சதுரவடிவ விரிப்புகள்: நான்குபுறமும் சமமான அளவுகளைக் கொண்டு சதுர வடிவத்துடன் தயாரிக்கப்படும் இந்த விரிப்புகள் பலவகையான வண்ணங்கள், டிசைன்களில் சதுரவடிவ அறைக்கு மிகவும் பொருத்தமானவையாக வருகின்றன. காபி டேபிள், டிவி ஸ்டாண்ட், புத்தக அலமாரி மற்றும் ஷூ ரேக் போன்ற சதுர மரச்சாமான்களை வைக்க பெரும்பாலும் இந்த சதுர வகை விரிப்புகளைப் பயன்படுத்துகிறார்கள்.


Next Story