இந்த நிலைமை விவசாயிகளுக்கு வரக்கூடாது!


இந்த நிலைமை விவசாயிகளுக்கு வரக்கூடாது!
x
தினத்தந்தி 22 Feb 2022 1:27 AM IST (Updated: 22 Feb 2022 1:27 AM IST)
t-max-icont-min-icon

உலகுக்கே உணவளிக்கும் உன்னதமான தொழில் விவசாயம். அந்த புனிதமான தொழிலை செய்யும் விவசாயிகள் சமுதாயத்தால் போற்றப்பட வேண்டியவர்கள்.

உலகுக்கே உணவளிக்கும் உன்னதமான தொழில் விவசாயம். அந்த புனிதமான தொழிலை செய்யும் விவசாயிகள் சமுதாயத்தால் போற்றப்பட வேண்டியவர்கள். “உழவன் சேற்றில் கால்வைத்தால்தான், நாம் சோற்றில் கைவைக்க முடியும்” என்பது பழமொழி.

விவசாயிகள், தாங்கள் பயிர்செய்து விளைவிக்கும் பொருளை, மிகுந்த மரியாதைக்குரிய பொருளாகத்தான் கருதுவார்கள். ஏனென்றால், அந்த விளைச்சலைக்காண அவர்கள் படும்பாடு சொல்லி மாளாது. நிலத்தை உழுது, பண்படுத்தி, விதை விதைத்து, நீர் பாய்ச்சி, உரமிட்டு, களைபறித்து, பயிர் முளைக்கத் தொடங்கிய நாளில் இருந்து, அறுவடைக்கு தயாராகும் நாள் வரை, கண்ணும் கருத்துமாக பராமரிப்பார்கள்.

இடையில் கனமழை, வெள்ளம், புயல், வறட்சி என்ற அசாதாரண நிலைவந்தால், ஒட்டுமொத்த பயிரும் நாசமாகிவிடும். இந்த தடைகளை தாண்டி பயிரை விளைவித்தாலும், உழைப்புக்கேற்ற பலன் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. விவசாயிகளின் வாழ்வு சிறக்க, அவர்கள் விளைவித்த பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவேண்டும். இந்த கோரிக்கை நீண்ட நெடுங்காலமாக வைக்கப்பட்டு வந்தாலும், இப்போதுவரை அதற்கு தீர்வு எட்டப்படவில்லை.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில், விவசாயிகளுக்கு உரியவிலை கிடைப்பதற்கான பரிந்துரைகளை பெறுவதற்கு, 2007-ம் ஆண்டு ஒரு கமிஷன் போடப்பட்டது. தேசிய வேளாண் விவசாயிகள் ஆணையம் என்று பெயரிடப்பட்ட அந்த ஆணையத்தின் பரிந்துரைகளில் முக்கியமானது, “விவசாயிகளின் உற்பத்தி செலவோடு 50 சதவீதம் கூடுதலாக கிடைக்கும் வகையில், விளைபொருட்களின் விலை நிர்ணயிக்கப்படவேண்டும்” என்பதுதான். ஆண்டுகள் உருண்டோடினாலும், இந்த கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

கடந்த ஆண்டு டெல்லியில், ஒரு ஆண்டுக்கு மேலாக விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் இந்த கோரிக்கையும் முக்கிய கோரிக்கையாக வலியுறுத்தப்பட்டது. இப்போது, இதே கோரிக்கை தமிழ்நாட்டிலும் எதிரொலித்திருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில், தக்காளி பயிரிட்ட விவசாயிகள், அதை விற்க முன்வந்தபோது, ரூ.5-க்கு மட்டுமே வாங்க வியாபாரிகள் முன்வந்த நிலையில், அதை தாங்கிக்கொள்ள முடியாமல், பார்த்து.. பார்த்து.. வளர்த்த தக்காளி செடிகளை டிராக்டர் வைத்து அழித்த சோக சம்பவம் நடந்திருக்கிறது.

14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளியை ரூ.100-க்கு வியாபாரிகள் கேட்டிருக்கிறார்கள். செடியிலிருந்து தக்காளி பழங்களை பறிக்க ஒருவருக்கு தினமும் ரூ.350 கூலி கொடுக்க வேண்டிய நிலையில், ஏற்கனவே முதலுக்கே மோசம்வந்ததுடன், இப்போது மேற்கொண்டும் பணத்தை கூடுதலாக செலவழிக்க வேண்டுமா? என்ற வேதனையுடன், தக்காளி செடிகளை அழிக்கும் முடிவை கனத்த இதயத்துடன் எடுத்துள்ளனர்.

தமிழகத்தில் விவசாயத்தையும், விவசாயியையும் காப்பாற்ற வேண்டுமென்றால், எல்லா பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலையை நிர்ணயித்து உடனே செயல்படுத்த மத்திய அரசாங்கமும், மாநில அரசும் முன்வரவேண்டும். மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர், 3 வேளாண் சட்டங்களை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரத்து செய்வதாக அறிவித்தபோதே பிரதமர் நரேந்திரமோடி, “குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் கிடைக்கவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலிக்க ஒரு குழு அமைக்கப்படும்” என்று வாக்குறுதி அளித்திருந்தார். இந்த குழு அமைக்க இப்போது முடிவெடுக்கப்பட்டு, 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், தேர்தல் கமிஷனிடம் ஒப்புதல் கேட்டபோது, தேர்தல் முடிந்தபிறகு இந்த குழுவை அமைத்துக்கொள்ளலாம் என்று பதில் வந்திருக்கிறது. எனவே, தேர்தல் முடிந்தவுடன் இந்தக் குழு அமைக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார்.

தேர்தல் முடிந்தவுடன் இந்தக்குழு அமைக்கப்பட்டு, ஒரு குறுகிய காலக்கெடுவுக்குள் அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதோடு மட்டுமல்லாமல், பயிர்களையும் விவசாயிகளிடம் இருந்து முறையாக கொள்முதல் செய்வதற்கான முறைகளையும் வகுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது. திருப்பூரில் நடந்த இந்த வேதனை சம்பவம், இனி தமிழகத்தில் எங்கும் எதிரொலித்து விடக்கூடாது. விவசாயம் போல் விவசாயிகளின் வாழ்வும் செழித்தால்தான், நாடும் செழித்து வளரும்.

Next Story