யோக தட்சிணாமூர்த்தி
யோக தட்சிணாமூர்த்தி, அறுபத்து நான்கு சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். யோக நிலையைப் பிரம்ம குமாரர்களுக்குக் கற்பித்து அத்தகைய யோக நிலையில் இருந்துக் காட்டிய உருவமே யோக தட்சிணாமூர்த்தியாகும்.
தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் வழக்கத்தில் இருக்கும் சைவ சமய தத்துவங்கள், சித்தாந்தங்கள் அடங்கிய நூல்கள், 'ஆகமங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று 'காமிகாமகம்.' இது திருக்கோவில் அமைப்பு முறைகளைப் பற்றியும் விளக்குகிறது. அதில் எட்டு வகையான தட்சிணாமூர்த்திகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. யோக தட்சிணாமூா்த்தி, வீணாதர தட்சிணாமூா்த்தி, மேதா தட்சிணாமூா்த்தி, ஆசின தட்சிணாமூா்த்தி, வர தட்சிணாமூா்த்தி, யோகபட்ட அபிராம தட்சிணாமூா்த்தி, ஞான தட்சிணாமூா்த்தி, சக்தி தட்சிணாமூா்த்தி ஆகியவை அந்த எட்டு தட்சிணாமூர்த்திகளாவர்.
இதில் யோக தட்சிணாமூர்த்தி சிறப்புக்குரியது. ஆலயங்களில் யோக தட்சிணாமூர்த்தியின் கோலம் அரிதானது. இரு பாதங்களையும் குத்திட்டு, குறுக்காக வைத்து, யோகபட்டயம் தரித்து, முன் இரண்டு கரங்களையும் முழங்கால்கள் மீது நீட்டி, பின் இரண்டு திருக்கரங்களில் அட்சய மாலை மற்றும் கமண்டலம் தரிக்க காட்சி தருபவரே, யோக தட்சிணாமூர்த்தி. சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நால்வரும், பிரம்மதேவரின் புதல்வர்கள். இவர்களின் அறிவு மயக்கத்தை நீக்கி, எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை உணர்வதற்காக உபதேசம் ஏதுமின்றி மவுனமாக இறைவன் அமர்ந்த திருக்கோலம் இதுவாகும்.