இலக்கற்ற வாழ்வு வாழ்வல்ல


இலக்கற்ற வாழ்வு வாழ்வல்ல
x

முஸ்லிமாக வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் ஓர் உன்னத லட்சியம் இருந்தாக வேண்டும். சக மனிதனுக்கு பயனுள்ள வகையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்பவர் தான் லட்சிய வழ்வு வாழ்கிறார்.

மூன்று வகையான மனிதர்கள் இந்த உலகில் வாழ்கிறார்கள். பிறந்தோம்-வாழ்ந்தோம்- இறந்தோம் என்று வாழ்பவர்கள் ஒரு வகை. பிறர் தயவில் வாழ்க்கையை ஓட்டுபவர்கள் அடுத்த வகையினர். இதில் மூன்றாவதாக உள்ளவர்கள், எதற்காகப் பிறந்தோம் என்பதை உணர்ந்து, வாழ்வின் நோக்கமும் லட்சியமும் என்ன என்பதை அறிந்து வாழும் மனிதர்கள்.

லட்சியத்துடன் வாழும் மனிதர்தான் உண்மையில் வாழ்கிறார். ஏனையோர் ஏதோ வாழ்கிறார்கள் அவ்வளவுதான். அந்த வகையில் முஸ்லிமாக வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் ஓர் உன்னத லட்சியம் இருந்தாக வேண்டும். இங்கு யாரையும் இறைவன் வீணாகப் படைக்கவில்லை. ஏதோ ஒரு உன்னத நோக்கத்திற்காகவே இறைவன் நம்மைப் படைத்துள்ளான்.

இறைவன் கேட்கிறான்: "நாம் உங்களை வீணாகவே படைத்துள்ளோம் என்றும், நம்மிடம் நீங்கள் திரும்பிக் கொண்டு வரப்படவே மாட்டீர்கள் என்றும் எண்ணிக்கொண்டிருந்தீர்களா, என்ன?". (திருக்குர்ஆன் 23:115)

லட்சியம் இல்லாமல் வாழும் மனிதர்களை விலங்குகளுக்கு ஒப்பானவர்கள் என்கிறான் அல்லாஹ். காரணம், அவர்கள் எதையும் சிந்திப்பதும் இல்லை, நல்உபதேசங்களைக் கேட்பதும் இல்லை. பின்வரும் வசனத்தைப் பாருங்கள்:

"மேலும் உண்மை யாதெனில், ஜின் மற்றும் மனித வர்க்கத்தில் பெரும்பாலோரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கின்றோம். அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன; ஆயினும் அவற்றால் அவர்கள் சிந்தித்து உணர்வதில்லை; அவர்களுக்கு கண்கள் இருக்கின்றன; ஆயினும் அவற்றால் அவர்கள் பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் இருக்கின்றன; ஆயினும் அவற்றால் அவர்கள் கேட்பதில்லை; அவர்கள் மிருகங்களைப் போன்றவர்கள்; ஏன் அவற்றை விடவும் அவர்கள் தாழ்ந்தவர்கள். அவர்கள்தாம் அலட்சியத்தில் மூழ்கியிருப்பவர்கள்". (திருக்குர்ஆன் 7:179)

சக மனிதனுக்கு பயனுள்ள வகையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்பவர் தான் லட்சிய வழ்வு வாழ்கிறார். அதன் மூலம் அவர் மறுமையின் நற்பேறுகளை அடைந்துகொள்கிறார். செயல், பேச்சு, சிந்தனை எதுவாக இருந்தலும் அது இறை திருப்தியைப் பெற்றுத் தருமா? மறுமை வெற்றியை தேடித்தருமா? என்று எண்ணிச் செயல்படுபவரே உண்மையான லட்சியவாதி. ஒவ்வொரு முஸ்லிமின் வாழ்வும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் விரும்புகிறது.

அதிக அளவில் நபிமொழிகளை அறிவித்த நபித்தோழர்களில் முதலிடத்தில் இருப்பவர் அபூஹுரைரா (ரலி). ஹிஜ்ரி எட்டாம் ஆண்டுதான் இஸ்லாத்தை ஏற்றார். அவர் மக்காவைச் சார்ந்தவரோ மதீனாவைச் சார்ந்தவரோ அல்ல. அவருக்கு வணிகமோ, விவசாயமோ தெரியாது. தெரிந்தது எல்லாம் யாரேனும் எதையாவது கூறினால், அதை அப்படியே மனப்பாடம் செய்து அடுத்தவரிடம் எடுத்துக்கூறும் தனித்தன்மை மட்டும்தான். அதையே தமக்கான லட்சியமாக எடுத்துக்கொள்கிறார்.

இஸ்லாத்தை ஏற்ற பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடனேயே தனது நாட்களை செலவிடுகிறார். நபிகளார் கூறும் அமுத வார்த்தைகளை மனப்பாடம் செய்யத் தொடங்குகிறார். அதற்காக முழு முயற்சியில் ஈடுபடுகிறார். ஊக்கத்துடன் செயல்படுகிறார். சிரமங்களைத் தாங்கிக்கொண்டார். இதோ இப்போது அதிக நபிமொழிகளை அறிவித்தோர் பட்டியலில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் முதலிடத்தில் இருக்கின்றார்.

பண்டைய பக்தாத் நகரில் பெரும் வியாபாரி ஒருவர் தமது மகனுக்கு இலக்கு நோக்கிய வாழ்வு என்றால் என்னவென்றும் உழைப்பின் உன்னதத்தையும் கற்றுக்கொடுக்க விரும்பினார். கையில் கொஞ்சம் பணம் கொடுத்து, இதை வைத்து வியாபாரம் செய் என்று கூறி அனுப்பி வைக்கிறார். ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதி வழியாக மகன் செல்கிறார். அங்கே ஒரு காட்சியைக் காண்கிறார். சிங்கம் ஒன்று ஒரு மானை வேட்டையாடுகிறது. நரி ஒன்று அதனை வேடிக்கைப் பார்க்கிறது. சிங்கம் தன் பசியைத் தீர்த்துவிட்டு சென்றபின் மீதி இருப்பதை நரி தின்னுகிறது.

இந்தக் காட்சியைப் பார்க்கும் இளைஞனின் மனதில், வேடிக்கை பார்க்கும் நரிக்கே இறைவன் உணவளிக்கும்போது நமக்கு ஏன் தரமாட்டான் என்ற தவறான எண்ணம் ஏற்படுகிறது. ஊர் திரும்புகிறான். நடந்ததை தந்தையிடம் விவரித்து, தான் திரும்பியதற்கான காரணத்தையும் கூறுகின்றான்.

தந்தை கூறினார்: அருமை மகனே! நான் உன்னை அனுப்பியது நரியாக இருப்பதற்கு அல்ல, சிங்கமாக வாழ்வதற்கு. படை வீரனாக இருப்பதற்கு அல்ல, படைத்தலைவனாக இருப்பதற்கு. உபதேசம் கேட்பவனாக இருப்பதற்கு அல்ல, உபதேசம் செய்பவனாக மாறுவதற்கு. நரியாக வாழ ஆசைப்பட்ட நீ, ஏன் சிங்கமாக மாற ஆசைப்படக் கூடாது என்று கேட்டார். மகன் சிந்திக்கத் தொடங்கினான்.

இதைத்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "வாங்கும் கைகளைவிட கொடுக்கும் கையே சிறந்தது". லட்சியம்தான் வாழ்வை அழகாக முன்னகர்த்தும் காந்த சக்தி. லட்சியம்தான் வாழ்வை அர்த்தம் பொதிந்ததாக மாற்றும். சமூகத்திற்குப் பயனுள்ள வகையில் இருக்கும் லட்சிய வாழ்வும் ஒருவகையில் வணக்கமே.


Next Story