வினை தீர்க்கும் விநாயகர்
முக்காலத்துக்கும் வழிகாட்டும் பிள்ளையார் கணங்களுகெல்லாம் அதிபதி. நற்காரியங்கள் அனைத்துக்கும் அவரே ஆதாரம். அவரை வழிபடுவதால் ஞானம், ஆனந்தம், வெற்றி ஆகிய அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மனிதர்கள் முதல் தேவர்கள் வரை யாரும் எந்தவொரு காரியத்தை ஆரம்பிக்கும்போதும், அது இடையூறின்றி இனிதே நடந்து முடிய விநாயகரை வழிபடுவது ஐதீகமாகும். பூஜை, ஹோமம் உள்ளிட்ட சகல சுப காரியங்களை நடத்தும்போது முதலில் விநாயகர் பூஜையைச் செய்த பின்னர்தான் மற்ற தேவதைகளுக்குப் பூஜைகள் செய்யப்படும். எதையும் எழுதுவதற்கு முன்பாக முதலில் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்குவது நமது பாரம்பரியமாக உள்ளது. முக்காலத்துக்கும் வழிகாட்டும் பிள்ளையார் கணங்களுகெல்லாம் அதிபதி. நற்காரியங்கள் அனைத்துக்கும் அவரே ஆதாரம். அவரை வழிபடுவதால் ஞானம், ஆனந்தம், வெற்றி ஆகிய அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சதுர்த்தி நாளில், அதிகாலையில் நீராடி, வீட்டில், பூஜை நடைபெறும் இடத்தைச் சுத்தப்படுத்தி, மாக்கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும். மண்ணால் பிள்ளையார் விக்கிரகம் செய்து வைத்து, அருகம்புல், வெள்ளெருக்கு மாலை சாத்தி, சந்தனம், குங்குமம் திலகமிட்டு அலங்கரிக்கலாம். நைவேத்யமாக மோதகம், அப்பம், அவல், பொரி கடலை, தேங்காய்ப்புட்டு, பொங்கல், எள்ளுருண்டை, தேன், சர்க்கரை, தினை மாவு, பால், மா, வாழை, கரும்பு, நாவற்பழம், விளாம்பழம், இளநீர் ஆகியவற்றை தாம்பூலத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
விநாயகர் துதிப் பாடல்களைப் பாடி, தூபம், தீபம் ஆகிய உபசாரங்கள் செய்து, வழிபாட்டை முடிக்கலாம். சதுர்த்தியன்று விநாயகரை வழிபடுவதால், சந்திரனின் அனுக்கிரகம் கிடைப்பதுடன், கேது, சனி ஆகிய கிரகங்களால் ஏற்படும் தோஷங்களும் நீங்கும். அதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும், அறிவு பிரகாசிக்கும், குடும்ப ஒற்றுமை ஏற்பட்டு, பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன.
சூரியனுக்குரிய நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நேரத்தில் வீட்டிலும், ஆலயத்திலும் விநாயகரை வழிபட்ட பின், அம்பிகைக்கு ஏழு நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டால், ராகு, கேது தோஷங்கள் நீங்கி, தடைபட்ட கல்யாணம் நடக்கும். பிள்ளைச் செல்வம் இல்லாத தம்பதியருக்கு, பிள்ளை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை
யுடன் கடைபிடிக்கப்படுகிறது.
விநாயகரும், மரங்களும்..
பிள்ளையார் அமர்ந்து அருள் தரும் ஐந்து பஞ்ச பூதங்களை குறிப்பிடும் மரங்கள் மிகவும் சிறப்பு பெற்றவையாக ஆன்றோர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, அரச மரம் - ஆகாய தத்துவமாகவும், வாத நாராயண மரம் - வாயு தத்துவமாகவும், வன்னி மரம் - அக்னி தத்துவமாகவும், முழுநெல்லி மரம் - நீர் தத்துவமாகவும், ஆல மரம் - நில தத்துவமாகவும் குறிப்பிடப்படுகின்றன. அந்த மரங்களின் அடியில் அருள்பாலிக்கும் பிள்ளையாரை வணங்கி வழிபட்டால் நினைத்த காரியங்கள் யாவும் வெற்றி பெறும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
* வில்வ மரத்தடியில் அமர்ந்துள்ள விநாயகரை, சதுர்த்தி நாளில் வழிபட்டு விட்டு, ஏழைகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தானமாகக் கொடுத்து, வில்வ மரத்தைச் வலம் வந்தால் கணவன் - மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் விலகி அவர்கள் அமைதியாக வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.
* வேப்ப மரத்தடி விநாயகரை, வலம் வந்து வழிபட்டால் மனதுக்குப் பிடித்த வாழ்க்கைத் துணை அமையும்.
* மா மரத்தடியில் அமர்ந்துள்ள விநாயகரை சதுர்த்தி நாளில் வழிபட்டு, மூன்று அல்லது ஐந்து சுமங்கலிகளுக்கு உணவும் வஸ்திர தானமும் செய்தால் வியாபாரம் சிறப்பாக நடக்கும்.
* நாவல் மரத்தடியில் இருக்கும் பிள்ளையாரை வழிபட்டு, இனிப்புகள் மற்றும் வெண்ணெய் தானம் செய்தால் குடும்பம் ஒற்றுமை மேம்படும். கணவன் - மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
* சந்தன மரத்தடியில் உள்ள பிள்ளையாரை வணங்கி வரும் மாணவர்கள் விளையாட்டு வீரராக உருவாகலாம். வியாபாரிகள் லாபம் பெறுவார்கள். நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக நடந்தேறும்.
ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய வளர்பிறை மற்றும் தேய்பிறை சதுர்த்தி நாள்களில் 16 கன்னிப் பெண்களுக்கு ரவிக்கைத் துணி, வளையல், மஞ்சள், குங்குமம் கொடுத்து வன்னி மரத்தடி விநாயகரை வணங்கினால், திருமணத் தடை நீங்கும். வன்னி மரத்தடி விநாயகருக்கு அவல், பொரி, பொட்டுக்கடலை படைத்து, அந்தப் பிரசாதத்தை 108
குழந்தைகளுக்கு வழங்கினால், தொழிலில் லாபம் கிடைக்கும்.