விபீஷணர் பட்டாபிஷேக நிகழ்ச்சி: ராமேசுவரம் கோவிலில் நாளை தரிசன அனுமதி இல்லை


விபீஷணர் பட்டாபிஷேக நிகழ்ச்சி: ராமேசுவரம் கோவிலில் நாளை தரிசன அனுமதி இல்லை
x

நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும் அனுமதி இல்லை.

ராமேசுவரம்,

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் தல வரலாற்றை விளக்கக்கூடிய ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.

முதல் நாளான இன்று மாலை 5 மணி அளவில் திட்டக்குடி சந்திப்பு சாலையில் துர்க்கை அம்மன் கோவில் அருகே தங்க ராவணசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை பகல் 1.30 மணி அளவில் தனுஷ்கோடி கோதண்டராமர் கோவிலில் விபீஷணர் பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 16-ந் தேதி பகல் 12.30 மணியளவில் ராமலிங்க பிரதிஷ்டை விழா நடைபெறுகிறது.

இதுகுறித்து கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் கூறும்போது, "ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவின் 2-வது நாளில் (அதாவது நாளை) கோவிலில் இருந்து ராமபிரான் மற்றும் விபீஷணர் பட்டாபிஷேக நிகழ்ச்சிக்காக தனுஷ்கோடி கோதண்டராமர் கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனை முன்னிட்டு நாளை அதிகாலை 2:30 மணியளவில் கோவில் நடைதிறக்கப்பட்டு 3 முதல் 3.30 மணி வரை ஸ்படிகலிங்க தரிசனம் நடைபெறும். தொடர்ந்து சாயரட்சபூஜை, கால பூஜைகள் நடைபெற்று காலை 7 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். அதனால் நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும் அனுமதி இல்லை. மாலை 5 மணிக்கு பிறகு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கம்போல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்" என கூறினார்.


Next Story