வாழ்வளிக்கும் வள்ளல் வயலூர் முருகப்பெருமான்


வாழ்வளிக்கும் வள்ளல் வயலூர் முருகப்பெருமான்
x

வயலூர் சுப்பிரமணியர் மணக்கோலத்தில் குமரனாக இருப்பதால், செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை ஏற்பட்டவர்கள் இவரை வழிபட, தோஷம் நீங்கி நல்ல வரன் அமையும்.

முருகப்பெருமானுக்கு பிடித்தமான ஆலயங்கள் இரண்டு என்பார் அருணகிரிநாதர். ஒன்று திருச்செங்கோடு, மற்றொன்று திருச்சி வயலூர். வயலூரின் சிறப்பே அருணகிரிநாதருக்கு, முருகன் மயில் மீது அமர்ந்து காட்சி கொடுத்து திருப்புகழ் பாட வைத்ததுதான். அவர் நீண்டகாலம் தங்கியிருந்து முருகப்பெருமானை வழிபட்டு, பாடி பரவசப்பட்ட இடம் இந்த வயலூர். குன்றுதோறும் குமரன் இருப்பது வழக்கம். ஆனால், இங்கு குன்றில்லாத சமவெளியில் முருகன் குடிகொண்டுள்ளார்.

அருணகிரிநாதரை திருவண்ணாமலையில் கம்பத்து இளையவராக தடுத்தாட்கொண்ட முருகப்பெருமான், முதன்முதலில் வயலூருக்குத்தான் வரச்சொல்லி உத்தரவிட்டார். அருணகிரிநாதர் இங்குள்ள முருகப்பெருமானை வழிபட்டு 18 பாடல்கள் பாடிய பெருமை கொண்ட தலம் இது. இங்கிருந்தே திருப்புகழ் எனும் பெரும் பொக்கிஷம் உருவானது என்பதும் இவ்வாலய பெருமைகளில் ஒன்று. முருகப்பெருமானின் பெருமை சொல்லும் ஆலயமாக இது இருந்தாலும், ஆதியில் இது சிவாலயமாகவே உருவானது என்கிறது தலவரலாறு.

உறையூரை தலைநகராக கொண்டு சோழர்கள் ஆட்சி செய்த காலம் அது. காட்டு விலங்குகளை வேட்டையாட சென்ற ஒரு சோழ மன்னன், அங்கிருந்த கரும்பு ஒன்றை ஒடிக்க வாளால் வெட்டினான். அப்போது ஒடிந்த கரும்பிலிருந்து ரத்தம் வடிந்தது. இதனால் பதறிய சோழன் வயலை தோண்டிப் பார்க்கையில், அங்கே ஈசன் லிங்கமேனியாக காட்சி அளித்தார். அங்கேயே அவருக்கு ஓர் ஆலயம் எழுப்பி, ஆதிநாதர் என்ற திருநாமம் இட்டு வணங்கினான் என்று சொல்லப்படுகிறது. 9-ம் நூற்றாண்டில் இந்த ஆலயம் மீண்டும் புனரமைக்கப்பட்டது.

ராஜகேசரிவர்மன், குலோத்துங்கச் சோழன், பரகேசி வர்மன், ராஜேந்திர சோழன் ஆகியோரால் திருப்பணிகள் கண்ட இந்த கோவிலின் கல்வெட்டுகள் ஆலயத்தின் பழமையை எடுத்துக் கூறுகின்றன. இங்குள்ள ஆதிநாதர் தம்மை நாடிவரும் பக்தர்கள் கேட்பதை மறக்காமல் கொடுப்பதால் 'மறப்பிலி நாதர்' என்றும், அக்னி பகவான் வழிபட்டதால் 'அக்னீசுவரர்' என்றும், விடங்கப்பெருமான், திருமகாதேவன், திருக்கற்றளி பெருமான் என பல நாமங்களால் வணங்கப்படுகிறார். இங்கு அம்பிகையின் திருநாமம் ஆதிநாயகி. வன்னி மரம் இத்தலத்தின் விருட்சமாகும். கோவிலுக்கு வெளியே முருகன் வேலால் உருவாக்கிய சக்தி தீர்த்தம் உள்ளது.

தாய், தந்தையை வழிபட்டு அனைவருக்கும் வழிகாட்டுகிறார் வயலூர் முருகன். அதனால் கோவிலுக்குள் சென்றதும் நாம் எதிர்கொள்வது சிவ சொரூபமே. இந்த திருத்தலத்தில் உள்ள கணபதி 'பொய்யாக்கணபதி' என்று பெயர் கொண்டுள்ளார். இவரிடம் வேண்டினால் பொய்க்காது என்பது வாக்கு. இவர் சன்னிதிக்கு அருகே இங்கு அருணகிரிநாதருக்கும் சன்னிதி உள்ளது. ஆனி மூலத்தன்று இவர் முருகனுடன் புறப்பாடாவார்.

எதிர்புறம் தட்சிணாமூர்த்தியின் தவக்கோலக்காட்சி. பொய்யாக்கணபதி சன்னிதியை அடுத்து முத்துக்குமாரசாமி. மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள முருகனை காண கண் கோடி வேண்டும். முத்துக்குமாரசாமியை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சகிதமாக காட்சியளிக்கிறார். வடபுற மூலையில் மகாலட்சுமி அருள்பாலிக்கிறார். வயலூர் முருகனை தரிசிப்பவருக்கு எனது அருள் கண்டிப்பாக உண்டு என்பதுபோல காட்சி தருகிறாள் மகாலட்சுமி.

மூலஸ்தானத்தில் முருகனின் மயில் வடக்கு பக்கம் பார்த்து இருக்கிறது. இதற்கு தேவமயில் என்று பெயர். ஆதிநாயகி ஏனைய தலங்களில் வடக்கு முகம் பார்த்தே இருப்பாள். இங்கு மட்டும் தென்முகம் பார்த்து இருப்பது அபூர்வமானது. ஏனைய தலங்களில் முருகப்பெருமான் தாய், தந்தையரை தனித்து நின்று பூஜை செய்வார். ஆனால் தெய்வ குஞ்சரி வள்ளியோடு சேர்ந்து பூஜை செய்கின்ற தனிச்சிறப்பு வயலூர் தலத்திற்கு உண்டு.

சிவன் சன்னிதிக்கு பின்புறம் தான் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். இது சிவத்தலம் என்றாலும், இவரே விசேஷ மூர்த்தியாக வணங்கப்படுகிறார். கந்த சஷ்டியின்போது முருகன்-தெய்வானைக்கும், பங்குனி உத்திர திருவிழாவில் முருகன்-வள்ளி திருக்கல்யாணம் நடக்கும். வள்ளி திருமணத்தின்போது, முருகனுக்கு வேடன், கிழவன் போல அலங்காரம் செய்தும், யானையால் வள்ளி விரட்டப்படுவது போலவும் பாவனையாகச் செய்வர். தைப்பூசத்தன்று அருகிலுள்ள 4 கோவில் சுவாமிகளுடன், முருகன் சேர்ந்து பஞ்ச மூர்த்திகளாக காட்சி தருவார்.

வயலூரில் முருகன் தனது வேலினால் தடாகம் உருவாக்கி அம்மை அப்பரை வழிபட்டார். கோவிலின் வெளியே கல்லால மரத்தடியில் வேல் வடிவில் உள்ள தோற்றத்தை 'இடும்பன் கோவில்' என்றும், 'கிராம தேவதைக் கோவில்' என்றும் சொல்கிறார்கள். முருகன் கை வேலின் வடிவமாகிய தேரடியான் கோவிலும் வந்தோர்க்கு வளம் தரும் அம்சமாக காட்சியளிக்கிறது.

திருவண்ணாமலையில் முருகப்பெருமானால் காப்பாற்றப்பட்ட அருணகிரிநாதர் "முத்தைத் திரு" பாடியபின்பு "வயலூருக்கு வா" என்று முருகன் சொல்ல, அதன்படி அருணகிரியார் இங்கு வந்துள்ளார். இங்குள்ள பொய்யாகணபதிதான் அருணகிரியாருக்கு அருள் தந்தவர் என்று செல்லப்படுகிறது. இங்குதான் அருணகிரி நாதர் திருப்புகழ் பாடும் ஆற்றலையும், அறிவையும் பெற்றார். இத்தலத்து முருகனே அருணகிரி நாதருக்கு நாவில் 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எழுதி, திருப்புகழை சரளமாக பாட அருள் செய்தார். அத்தகைய ெபரும் சிறப்பும் கொண்ட முருகன் தலம். திருப்புகழின் பெருமையில் வயலூர் முருகனுக்கு தனிச்சிறப்பு உண்டு. அருணகிரியார் திருப்புகழ் பாட அருளிய முருகன் என்பதால், எழுத்துத் துறையில் உள்ளவர்கள், பாடலாசிரியர்கள் இங்கு வேண்டிக்கொள்ள கலையில் சிறப்பிடம் பெறலாம். அருணகிரிநாதர் மட்டுமல்ல, ஞானவரோதயர் என்ற அடியாருக்கு அருள் புரிந்த திருத்தலம். இந்த ஞானவரோதயர், கந்தபுராணத்தில் 7-வது காண்டமாகிய உபதேச காண்டம் பாடியவர். விராலிமலைத் தலப்புராணமும் இவர் பாடியிருக்கிறார்.

எண்ணினாலும், தரிசித்தாலும் எண்ணிலடங்கா பேறுகளையும், வரங்களையும் அள்ளித்தரும் வயலூரானை நேரில் தரிசித்தால், நலம் பெருகும். வளம் தழைக்கும் என்பது வாரியார் சுவாமிகள் வாக்கு.

வயலூர் சுப்பிரமணியர் மணக்கோலத்தில் குமரனாக இருப்பதால், செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை ஏற்பட்டவர்கள் இவரை வழிபட, தோஷம் நீங்கி நல்ல வரன் அமையும். அருணகிரிநாதருக்கு திருமண கோலத்தில் குமாரராக காட்சி தந்ததால் தடைபட்ட திருமணங்கள் நடைபெறும் என்பது ஐதீகம். திருமண தோஷம் மற்றும் தடைகள் உள்ளவர்கள், முதல் நாள் இரவே இங்கு வந்து தங்கி, மறுநாள் சக்தி தீர்த்தத்தில் நீராடி, முருகப்பெருமானை வழிபட்டால் திருமணம் நடந்தேறும் என்பது நம்பிக்கை. பழனி, திருச்செந்தூருக்கு வேண்டுதல் வைத்தவர்கள் இந்த கோவிலில் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தலாம். ஆனால், வயலூரானுக்கு வைத்த வேண்டுதலை வேறு கோவிலில் செலுத்த முடியாது. அசலோடு வசூலித்து விடுவான் இந்த வடிவேலன் என்பது இந்த ஊர் மக்களின் சொல்லாக இருக்கிறது.

சதுர தாண்டவ நடராஜர்

நடராஜர் வழக்கமாக ஒரு காலை தூக்கி நடனமாடும் கோலத்தில் காட்சி தருவார். ஆனால், இங்கு காலை தூக்காத கோலத்தில் நடராஜரை தரிசிக்கலாம். இந்த கோலம் நடனமாடுவதற்கு முந்தைய நிலையாகும். எனவே, இவரது சடாமுடியும் முடியப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. காலுக்கு கீழே முயலகனும் இல்லை. இவருக்கு 'சதுரதாண்டவ நடராஜர்' என்று பெயர். மார்கழி திருவாதிரை திருநாள் இவருக்கு விசேஷ நாளாகும்.

தத்து திருப்புதல்

`தத்து திருப்புதல்' என்ற நேர்த்திக்கடன் இந்த கோவிலின் வழக்கமாக இருக்கிறது. தோஷம் உள்ள குழந்தைகளை குறிப்பிட்ட காலம் வரை கோவிலுக்கு தத்து கொடுத்தலும், உரிய காலம் முடிந்ததும் தத்து திருப்புதலும் செய்கிறார்கள். நாகதோஷம் மற்றும் குழந்தை வரம் இல்லாதோர் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் தோஷங்கள் நீங்கி, நற்பலன்கள் அடைவர் என்பது நம்பிக்கை. இதுதவிர ஆண்டு முழுக்க பக்தர்கள் இங்கு வந்து முடி இறக்குதல், காவடி எடுத்தல், பால் குடம் எடுத்தல், காது குத்துதல், சஷ்டி விரதம் இருத்தல், ஆண்கள் அங்கப்பிரதட்சணம் செய்தல், பெண்கள் கும்பிடுதண்டமும், அடிப்பிரதட்சணமும் செய்வது என பல நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

சூரியனை வழிபடும் கிரகங்கள்

வயலூர் முருகன் கோவிலில் உள்ள நவக்கிரக சன்னிதியில் சூரியபகவான் தனது மனைவிகள் சாயாதேவி, சம்யாதேவியுடன் காட்சி தருகிறார். சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்ரன், சனீஸ்வரன், ராகு, கேது ஆகிய கிரகங்கள் சூரிய பகவானை நோக்கி வழிபட்ட நிலையில் காணப் படுகிறார்கள்.


Next Story