வரம் தரும் வரலட்சுமி விரதம்


வரம் தரும் வரலட்சுமி விரதம்
x

இந்த ஆண்டு வரலட்சுமி நோன்பு வருகிற 5.8.2022 (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நாளில் வரலட்சுமி அன்னையான மகாலட்சுமியை முழுமனதுடன் தியானித்து, அவளைச் சரணடைய வேண்டிய நாள்.

வரலட்சுமி விரதத்துக்கு புராணக் கதைகள் உண்டு. அன்னை பார்வதியின் சாபத்துக்கு ஆளான சித்ரநேமி என்ற கணதேவதை, பெண்கள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தைக் கண்டு, அதை அனுஷ்டித்து சாப விமோசனம் பெற்றார்.

பூவுலகில் சவுராஷ்டிர நாட்டின் ராணி சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால், மகாலட்சுமியை அவமதித்தாள். அதனால் அனைத்து செல்வங்களையும் இழந்து வருந்தினாள். சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வ அனுகூலத்தால் வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, அதைக் கடைப்பிடித்தாள். அதனால் மகிழ்ந்த மகாலட்சுமி அவளுக்கு சகல நலன்களையும் அருளினாள். சுசந்திராவும் தன் மகளைப் பார்த்து வரலட்சுமி விரதம் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வளமோடு வாழ்ந்தாள்.

இப்படி சகல வளங்களையும் தரும் இந்த வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். முக்கியமாகச் செய்ய வேண்டியவர்கள் பெண்கள் ஆவர். சுமங்கலிகள், தாலி பாக்கியத்துக்காகவும், சுபிட்சம், சவுபாக்கியம், தனம் போன்றவற்றுக்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்துவரும் வரலட்சுமி பூஜையில் இருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால், அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். பூஜை முடிந்த மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும்.

எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி பிரசாதத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.

விரதம் இருப்பது எப்படி?

வீட்டின் கிழக்குப்பகுதி ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும். வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். அரிசி, தங்கம், வெள்ளி, ரத்தினம் ஆகியவற்றை கும்பத்தில் நிரப்பவும் (தீர்த்தத்தையும் நிரப்பலாம்). மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, புதிய வஸ்திரம் சாற்ற வேண்டும்.

பின்னர் வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலட்சுமித் தாயை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்து, பயபக்தியுடனும் அழைத்து வந்து, அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலட்சுமி பிரதிமை பிம்பத்தில் இருந்து விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு, ஆவாஹணம் செய்ய வேண்டும். நாம் செய்யும் பூஜை எந்தவித இடையூறுகளும் இல்லாமல் நன்கு நடைபெற வேண்டும் என்பதற்காக விநாயகரை பூஜித்து, பிறகு வரலட்சுமி பூஜையைத் தொடங்க வேண்டும்.

பூஜையின் முடிவில் மஞ்சள் கயிறை(சரடு) கையில் கட்டிக் கொள்ளவேண்டும். மஞ்சள் கயிறு மங்கலத்தின் அறிகுறி. அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது. எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைக்க வேண்டும்.


Next Story