இன்று வரலட்சுமி விரதம்.. இல்லம் தேடி வருவாள் அன்னை


இல்லம் தேடி வருவாள் மகாலட்சுமி
x
தினத்தந்தி 16 Aug 2024 3:00 AM IST (Updated: 16 Aug 2024 3:00 AM IST)
t-max-icont-min-icon

வரலட்சுமி விரத நாளன்று மகாலட்சுமியை வரவேற்று பூஜை செய்வதன்மூலம் வீட்டில் செல்வம் தங்கும் என்பது ஐதீகம்.

ஒரு சமயம் மகாலட்சுமி எங்கு வாசம் செய்யலாம் என்பதை தேர்வு செய்வதற்காக வயதான சுமங்கலிப் பெண் வேடத்தில் வீடு வீடாக வந்தாள். முதலில் அவள் சென்ற வீட்டில் பொழுது விடிந்த பிறகும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். அதனால், அடுத்த வீட்டிற்கு சென்றாள். அந்த வீட்டில் சுத்தமே இல்லாமல் எங்கும் குப்பையாக இருந்தது. அதனால் மூன்றாவது வீட்டை தேடிச் சென்றாள் மகாலட்சுமி. அந்த வீட்டில் கணவனும், மனைவியும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். மனைவி தலைவிரி கோலத்தில் இருந்தாள்.

அதனால் நான்காவது வீட்டைத்தேடி நகர்ந்தாள். அந்த வீட்டின் வாசலில் அழகான கோலம் போடப்பட்டிருந்தது. பூஜையறையில் இல்லத்தரசி பக்தியுடன் பாடிக்கொண்டிருந்தாள். அந்த வீடு மங்களகரமாக காட்சியளித்தது. வாசலில் வயதான பெண் வேடத்தில் தேவி நிற்பதை கண்ட அந்த இல்லத்தரசி அங்கு வேகமாக வந்தாள். தேவியை வரவேற்று உபசரித்தாள்.

தேவிக்கு உண்பதற்கு பால் எடுத்து வர சமையலறைக்குள் சென்றாள். பாலுடன் திரும்பி வந்து பார்த்தபோது தேவி இல்லை. வீட்டிற்கு வந்த அம்மா எங்கே என்று அந்த இல்லத்தரசி தேடினாள். ஆனால் காணவில்லை. இதையடுத்து தனது பூஜையை தொடர பூஜையறைக்குள் சென்றாள். அங்கு அறை முழுவதும் செல்வம் கொட்டிக்கிடந்தது. வயதான சுமங்கலிப் பெண் உருவில் தன் வீட்டுக்கு வந்தது செல்வத்தை வாரி வழங்கும் மகாலட்சுமிதான் என்பதை அறிந்த இல்லத்தரசி மகிழ்ந்தாள்.

வரலட்சுமி விரத நாளன்று மகாலட்சுமி நம் இல்லம் தேடி வருவதாக நம்பிக்கை. அன்றைய தினம் மகாலட்சுமியை வரவேற்று பூஜை செய்வதன்மூலம் வீட்டில் செல்வம் தங்கும் என்பது ஐதீகம்.

அவ்வகையில் இன்று (16.8.2024) வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இல்லம் தேடி வரும் மகாலட்சுமியை வரவேற்று மனம் குளிரும் வகையில் பூஜை செய்யவேண்டும். வரலட்சுமி விரதம் இருப்பவர்கள் கலசம் வைத்து அதில் வரலட்சுமியை ஆவாகனம் செய்து, அன்னைக்கு பிடித்தமான நைவேத்யங்களை படைத்து பூஜை செய்வது சிறப்பு.

வரலட்சுமி விரத பூஜை செய்யும் போது, சுமங்கலிப் பெண்கள் நோன்பு சரடை வைத்து பூஜை செய்து, பூஜை முடிந்ததும் அந்த சரடை தங்கள் கணவன் கையால் கட்டிக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் அவர்களுக்கு தீர்க்க சுமங்கலிப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதேபோல், இந்த பூஜையில் பங்கேற்கும் திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள், நல்ல கணவர் அமைய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வரலட்சுமியை வழிபடலாம். அந்த வழிபாட்டால் மனதில் எண்ணிய கணவர் வாய்ப்பார் என்பது நம்பிக்கை.

வீட்டில் பெரிய அளவில் பூஜை செய்ய இயலாதவர்கள், விலை உயர்ந்த பொருட்களை எதுவும் வாங்க முடியாதவர்கள் எளிமையாக வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் வைத்து, சர்க்கரை பொங்கல் படையல் வைத்து வழிபடலாம்.

குறிப்பாக, வரலட்சுமி விரத நாளன்று நாம் அம்பிகைக்கு என்ன நைவேத்தியம் படைக்கிறோமோ, அதை வீட்டிற்கு வருபவர்களுக்கு பிரசாதமாக வழங்கவேண்டும். வீடு தேடி வந்து பசி என உணவு கேட்பவர்களுக்கும் கொடுக்க வேண்டும். அப்படி செய்வதால் மகாலட்சுமி அருள் செய்வாள் என்பது ஐதீகம்.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional


Next Story