உவரி கோவில் வைகாசி விசாக திருவிழா - பக்தர்கள் கடல் மண் சுமந்து நேர்த்தி கடன்
உவரி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கடல் மண் சுமந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
நெல்லை,
தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் பழமையானது நெல்லை மாவட்டம் உவரி சுயம்பு லிங்கசுவாமி கோவில். வங்கக் கடலோரம் அமைந்துள்ள இந்த கோவிலில் சுவாமி சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. இதைத் தொடர்ந்து விசாகத் திருவிழாவான இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அபிஷேகம் உதயமார்தாண்ட பூஜை அலங்கார பூஜை தீபாராதனை பிரசாதம் வழங்கல் நடந்தது.
அதிகாலையில் இருந்து பக்தர்கள் கடலில் நீராடி நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். திரளான பக்தர்கள் கடல் மண்ணை பெட்டியில் சுமந்து வந்து அதை கடற்கரையில் கொட்டி நேர்த்தி கடன் செலுத்தினர்.
காலை முதல் மாலை வரை உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் திருவாசகம் முற்றோதுதல் நடந்தது மதியம் உச்சி கால பூஜையும் சிறப்பு அன்னதானமும் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்.