இரட்டை நந்தி


இரட்டை நந்தி
x

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோமீட்டரில் இருக்கிறது சர்க்கார் பெரிய பாளையம். இங்கு 2,500 ஆண்டுகள் பழமையான சுக்ரீஸ்வரர் ஆலயம் இருக்கிறது.

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயத்தின் மூலவர் சுக்ரீஸ்வரர் லிங்க வடிவில் அருள்கிறார். அம்பாள் திருநாமம் ஆவுடைநாயகி. கிருதாயுகத்தில் காவல் தெய்வமாக அருள்பாலித்து வந்த இத்தல இறைவன், திரேதாயுகத்தில் சுக்ரீவனாலும், துவாபரயுகத்தில் இந்திரனின் வாகனமான ஐராவதத்தாலும், கலியுகத்தில் தேவர்கள், அரசர்கள், பக்தர்களாலும் வணங்கப்பட்டு வருகிறார். அந்த வகையில் நான்கு யுகங்களைக் கடந்தும் வழிபாட்டில் இருக்கும் ஆலயமாக இந்த ஆலயம் போற்றப்படுகிறது.

இந்த ஆலயத்தின் மூலவரை நேரான வாசல் வழியாக வந்து வழிபட முடியாது, தெற்கு வாசல் வழியாக மட்டுமே வந்து வழிபட முடியும். இந்த ஆலயத்தில் இரண்டு நந்திகள் ஒன்றன்பின் ஒன்றாக இருக்கின்றன. முதலில் உள்ள நந்திக்கு, கொம்பு, காது இல்லை.

ஒருமுறை விவசாயி ஒருவரின் நிலத்தில் மாடு ஒன்று மேய்ந்தது. ஆத்திரமடைந்த விவசாயி, அந்த மாட்டின் காதையும், கொம்பையும் வெட்டியுள்ளார். மறுநாள் கோவிலுக்குச் சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கிருந்த கற்சிலையான நந்தியின் கொம்பும், காதும் வெட்டப்பட்டு ரத்தம் வழிந்துள்ளது. வந்தது தெய்வ நந்தி என்பதை அறியாமல் செய்த தவறுக்கு விவசாயி வருந்தினார். அதற்கு பிராயச்சித்தமாக, புதிய நந்தி சிலை ஒன்றை, பழைய நந்தி சிலையின் பின்பாக பிரதிஷ்டை செய்தார் என்று இந்த இரட்டை நந்திகளுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.


Next Story