நாளை முதல் 5 நாட்கள் தெப்ப உற்சவம்.. திருச்சானூரில் தயார் நிலையில் தெப்பம்
தெப்ப உற்சவ விழாவின் முதல் நாளில் ருக்மணி, சத்தியபாமா சமேத ஸ்ரீகிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
திருப்பதி:
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர தெப்ப உற்சவ விழா நாளை தொடங்குகிறது. 21-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ள இந்த உற்சவத்தின்போது, தினமும் உற்சவர்கள் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். தெப்ப உற்சவத்திற்காக திருச்சானூரில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தெப்பக்குளத்தில் தெப்பம் அழகாக வடிவமைக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
விழாவின் முதல் நாளில் ருக்மணி, சத்தியபாமா சமேத ஸ்ரீகிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இரண்டாம் நாளில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜசாமி தெப்பத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். கடைசி மூன்று நாட்கள் (19, 20 மற்றும் 21-ம் தேதி) பத்மாவதி தாயார் தெப்பத்தில் எழுந்தருள்கிறார்.
வருடாந்திர தெப்ப உற்சவத்தையொட்டி 17-ம் தேதியில் இருந்து 21-ந்தேதி வரை கோவிலில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, லட்சுமி பூஜை, புஷ்பாஞ்சலி சேவை உள்ளிட்ட அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.