முருகப்பெருமானுக்கு 'மூன்று மயில்'
முருகனின் வாகனம் மயில் என்பதை அனைவரும் அறிவர். ஆனால் முருகப்பெருமானுக்கு மூன்று மயில்கள் வாகனமாக உள்ளன. அந்த மயில்கள் மந்திர மயில், தேவ மயில், அசுர மயில் எனப்படுகிறது.
இந்து சமயத்தில் பல்வேறு தெய்வ வழிபாடுகள் இருந்தாலும், அவை ஒவ்வொன்றும் ஒரு தனித்துவத்தைப் பெற்று விளங்குகின்றன. நாம் வழிபடும் தெய்வங்களில் மகாவிஷ்ணுவுக்கு ஒரு முகம், அக்னி பகவானுக்கு இரண்டு முகம், தத்தாத்ரேயருக்கு மூன்று முகம், பிரம்மனுக்கு நான்கு முகம், சிவபெருமான், அனுமன், காயத்ரிதேவி, ஹேரம்ப கணபதி ஆகியோருக்கு ஐந்து முகங்கள், முருகப்பெருமானுக்கு மட்டுமே ஆறு முகம்.
முருகப்பெருமானை, ஆறுமுகப் பெருமானாக வழிபடுவதற்கான காரணத்தை, தான் இயற்றிய திருமுருகாற்றுப்படை என்ற நூலின் மூலமாக நக்கீரர் விளக்கிக் கூறுகிறார். அதன்படி, உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு முகம், பக்தர்களுக்கு அருள் செய்ய ஒரு முகம், வேள்விகளைக் காக்க ஒரு முகம், உபதேசம் புரிய ஒரு முகம், தீயோரை அழிக்க ஒரு முகம், பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் இணைய ஒரு முகம். அதன் காரணமாகத்தான் முருகப்பெருமானுக்கு 'சரவணபவ' என்ற ஆறு எழுத்து மந்திரமும் அமையப்ெபற்றுள்ளது. இந்த ஷடாட்சர மகா மந்திரத்தில் உள்ள 'ச' என்பது லட்சுமி கடாட்சத்தைக் குறிப்பதாகும். 'ர'- சரஸ்வதி கடாட்சம், 'வ' - போகம் மற்றும் மோட்சம், 'ண' சத்ருஜயம், 'ப' - மிருத்யுஜயம், 'வ' நோயற்ற வாழ்வு என்று தனித்தனியாக ஒவ்வொன்றைக் குறிக்கின்றன.
முருகனின் ஆறு படைவீடுகளும், நம் உடலில் உள்ள ஆறு குண்டலிகளாக விளங்குவதாக சொல்லப்படுகிறது. அவை, திருப்பரங்குன்றம் - மூலாதாரம், திருச்செந்தூர் - சுவாதிஷ்டானம், பழனி - மணிபூரகம், சுவாமிமலை - அனாஹதம், திருத்தணிகை - விசுக்தி, பழமுதிர்சோலை - ஆக்ஞை.
முருகனின் வாகனம் மயில் என்பதை அனைவரும் அறிவர். ஆனால் முருகப்பெருமானுக்கு மூன்று மயில்கள் வாகனமாக உள்ளன என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. முருகப்பெருமான் ஞானப் பழத்தைப் பெறுவதற்காக, உலகத்தை மயில் மீது ஏறி வலம் வந்தார். அந்த மயில் 'மந்திர மயில்' ஆகும். அதே போல் முருகப்பெருமான், சூரபதுமனுடன் போரிடுவதற்காக அவரது மயில் வாகனமாக தேவேந்திரன் உருமாறினான். இதனை 'தேவ மயில்' என்பார்கள். சூரபதுமன் மரமாக உருமாறி நின்றபோது, அந்த மரத்தை தன்னுடைய வேல் கொண்டு இரண்டாகப் பிளந்தார், முருகப்பெருமான். அதில் ஒரு பகுதி மயிலாகவும், மற்றொரு பகுதி சேவல் கொடியாகவும் மாறியது. இதில் உள்ள மயில் 'அசுர மயில்' எனப்படுகிறது. இப்படி முருகப்பெருமானுக்கு மூன்று மயில்கள் உண்டு.