திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் தேரோட்டம்


திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் தேரோட்டம்
x

தேரோட்டத்தை முன்னிட்டு வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக உற்சவருக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்தில் ஒய்யாரி நடனத்துடன் சந்திரசேகரர்-மனோன்மனி தாயார் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். அதைத்தொடர்ந்து காலை 9.30மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

"தியாகராயா ஆரோரா... ஒற்றியூரா நமச்சிவாய..." என பக்தி கோஷங்கள் முழங்க, கலாநிதி வீராசாமி எம்.பி, திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, சமத்துவ மக்கள் கழக மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக் நாராயணன், பா.ஜ.க. வடசென்னை கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்கணேஷ் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

வடிவுடையம்மன் கோவில் சன்னதி தெருவில் இருந்து புறப்பட்ட 41 அடி உயரம் கொண்ட தேர், 108 கைலாய வாத்தியம் முழங்க, சிவாச்சாரியார்கள் புடைசூழ, சிலம்பாட்டம், பரத நாட்டியம், 108 சங்க நாதம் முழங்க நான்குமாட வீதிகளை சுற்றி வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டத்தை காண வந்த பக்தர்களுக்கு நீர்மோர், பழங்கள் வழங்கப்பட்டன. பல வீடுகளில் குடும்பமாக வந்து தேருக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வசதி செய்யப்பட்டிருந்தது. போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில் போலீசார் திருவொற்றியூர் எம். ஆர். எப். பில் இருந்து எண்ணூர் விரைவு சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

மாசி திருவிழாவின் 9-ம் நாள் உற்சவமான திருக்கல்யாணம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. அதைதொடர்ந்து 63 நாயன்மார்களின் வீதி புறப்பாடு உற்சவமும் நடைபெறுகிறது.


Next Story