காளிக்கு அருள்புரிந்த திருவாலங்காடு ஈசன்


காளிக்கு அருள்புரிந்த திருவாலங்காடு ஈசன்
x

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் அமைந்துள்ளது, வண்டார் குழலியம்மை உடனாய வடாரண்யேஸ்வரர் கோவில். இந்தக் கோவில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த உப கோவிலாகும்.

சிவபெருமான் திருநடனம் புரியும் 5 சபைகளில் முதல் சபையான ரத்தின சபையைக் கொண்ட சிறப்பு மிக்க கோவிலாகவும் இது திகழ்கிறது. இந்த ஆலயத்தின் தல விருட்சம், ஆல மரம். தீர்த்தம்- முக்தி தீர்த்தம் ஆகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர், பட்டினத்தடிகள், அருணகிரிநாதர், கச்சியப்ப சிவாச்சாரியார், ராமலிங்க சுவாமிகள், பாம்பன் சுவாமிகள் ஆகியோரால் பாடல் பெற்ற சிவாலயம் இது. மேலும் தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களில் இது 15-வது திருத்தலம் ஆகும். நடனக் கலைகளில் தேர்ச்சி பெற விரும்புபவர்கள் வணங்க வேண்டிய தலம். கணவன்- மனைவிக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்தும் தலம் என்ற பெருமைக்குரியது, இந்தக் கோவில்.

தல வரலாறு

சும்பன், நிசும்பன் என்ற இரு அரக்கர்கள், ஆல மரங்கள் அதிகமாக உள்ள காட்டில் தங்கி சிவபெருமானை நோக்கி தவம் செய்தனர். அந்த தவத்தின் காரணமாக சிவபெருமானிடம் இருந்து, தங்கள் உடலில் இருந்து விழுகின்ற ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்தும் தங்களைப் போலவே ஒவ்வொரு உருவாக உருவாகிக் கொண்டே இருக்க வேண்டும்' என்று வரம் பெற்றனர். அந்த வரத்தினால் ஏற்பட்ட ஆணவத்தால், தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்தனர். இதனால் பாதிப்படைந்த தேவர்கள் கயிலைநாதனிடம் முறையிட்டனர்.

சிவபெருமான், பராசக்தியைப் பார்க்க, அந்த அன்னை தன்னுடைய அம்சமாக 8 திருக்கரங்களுடன் கூடிய காளியை தோற்றுவித்தார். அன்னையின் உத்தரவின் பேரில் ஆலங்காட்டிற்கு வந்த காளி, அசுரர்களுடன் போரிட்டாள். அப்போது அசுரர்களின் உடலில் இருந்து வழிந்த ரத்தம் பூமியில் பட்டதால், அதில் இருந்து பல்வேறு அசுரர்கள் உருவாயினர். இதனால் அவர்களின் ரத்தம் பூமியில் படாதவாறு, கபாலத்தில் பிடித்து குடித்து விட்டாள், காளி தேவி. இதனால் அசுரர்கள் அழிந்தனர். அசுர ரத்தம் அருந்தியதால், காளிக்கு அசுர குணம் வந்தது. இதனால் தேவர்களுக்கும், மக்களுக்கும் துன்பம் ஏற்படும் நிலை உருவானது. இதனால் தேவர்கள் அனைவரும் சிவபெருமானை சரணடைந்தனர். இதையடுத்து சிவபெருமான், பார்வதிதேவியுடன் ஆலங்காட்டிற்கு வந்து சேர்ந்தார். காளி தன் நிலை புரியாமல் சிவபெருமானையே போருக்கு அழைத்தாள். பிரம்மா, விஷ்ணு, நாரதர் ஆகியோர் இருவரையும் சமாதானம் செய்து நாட்டிய போட்டிக்கு ஏற்பாடு செய்தனர். முஞ்சிகேச (சுனந்த) முனிவர், கார்க்கோடகர் (நாகம்) முனிவர் தலைமையில் நாட்டியம் தொடங்கியது.

"காளி.. நீ என்னுடன் நடனம் ஆடி வெற்றி பெற்றால் இந்த ஆலங்காட்டை ஆளலாம்" என்றார், சிவபெருமான். ஈசன் 17 வகையான நாட்டியங்களை செய்தார். காளியும், அந்த நாட்டியங்களை சிறப்பாக செய்தாள். ஒரு கட்டத்தில் சிவபெருமான் நாட்டியத்தின் இடையில், வலது காதினில் இருந்த குண்டலத்தை கீழே தவறவிட்டு, வலது பாதம் ஊன்றி, இடது பாதத்தால் அக்குண்டலத்தை எடுத்து திருச்செவியில் அணிந்து கொண்டார். இதனை 'ஊர்த்துவ தாண்டவம்' என்கிறார்கள். இதைக் கண்ட காளி இதுபோன்ற தாண்டவம் தன்னால் ஆட இயலாது என்று தோல்வியை ஒப்புக்கொண்டார். இப்போது காளியின் முன் இறைவன் தோன்றி, "என்னைத் தவிர உனக்கு சமமானவர் வேறு யாரும் கிடையாது. எனவே இத்தலத்தில் என்னை வழிபாடு செய்ய வருபவர்கள் முதலில் உன்னை வழிபாடு செய்த பிறகு, என்னை வழிபட்டால் தான் முழு பலன் கிடைக்கும்" என்று வரமளித்தார். ஆலங்காடு ஆலயத்தில் காளிக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது.

காரைக்கால் அம்மையார் தனது தலைகளால் நடந்து வந்து சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்ற தலம் இதுவாகும். மூலவர் ஆலமரத்தின் கீழ் சுயம்புவாக தோன்றியதால் 'வடாரண்யேஸ்வரர்' என்று போற்றப்படுகிறார். வடம் - ஆலமரம். ஆரண்யம் - காடு. 'ஆலங்காட்டு இறைவன்' என்பது இவரது பெயர். தேவர்கள் வழிபட்டதால் 'தேவர் சிங்கப்பெருமான்' என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கோவிலின் பின்புறத்தில் 'சென்றாடு தீர்த்த குளம்' உள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சுவாதி நட்சத்திரத்தில் இங்கு தெப்பத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் பங்குனி உத்திர தீர்த்தவாரி உற்சவங்களும் இந்தத் திருக்குளத்தில் நடைபெறுகிறது. 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய திருக்குளம் இதுவாகும். திருக்குளத்தின் நடுவில் நீராழி மண்டபம் உள்ளது. இதனை 'முக்தி தீர்த்தம்' என்றும் அழைப்பார்கள். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். விழாக் காலங்களில், கோவில் வழிபாட்டு நேரம் மாறுபடும்.

மாந்தி வழிபட்ட மாந்தீஸ்வரர்

சனி பகவானின் புதல்வர், மாந்தி. ஒரு முறை இவர் மீது பல்லி ஒன்று விழுந்தது. அதற்குரிய பலன் தீயதாக இருந்ததால் வருத்தப்பட்ட மாந்தி, தன் தந்தையிடம் இதுகுறித்து முறையிட்டார். சனி பகவானோ, சிவபெருமானை நோக்கி தவம் செய்யுமாறு கூறினார். அதன்படி மாந்தி, திருவாலங்காடு வந்து தவம் செய்தார். சிவபெருமான் மாந்திக்கு நேரில் திருக்காட்சி நல்கினார். அப்போது மாந்தி, தனக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்கி அருள வேண்டினார். அதற்கு ஈசன், "நீ ஒரு மண்டலம் என்னை வழிபட்டு தோஷம் நீக்கிக்கொள்" என்று அருளினார். மாந்தி இத் திருத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஒரு மண்டலம் வழிபட்டார். இதனால் அவரது தோஷம் நீங்கியது. மாந்தி வழிபட்ட சிவலிங்கம், 'மாந்தீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறது. இந்த சிவலிங்கத்தை வழிபட்டால், அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, ஜென்மச் சனி போன்றவற்றின் தாக்கம் குறையும். அதோடு தீராத நோய் தீரும், திருமணத் தடை அகலும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடன் சுமை அகன்று, நிம்மதி ஏற்படும். மாணவ- மாணவிகளுக்கு கல்வி அறிவு பெருகும்.

காரைக்கால் அம்மையார்

காரைக்கால் நகரில் அவதரித்தவர் புனிதவதியார். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரமதத்தன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஒருநாள் கணவர் கொடுத்து அனுப்பிய இரு மாங்கனிகளில் ஒன்றை அடியார் கோலத்தில் வந்த இறைவனுக்கு அளித்தார். கணவன் வந்த பிறகு அவருக்கு மற்றொரு மாங்கனியை உணவு பரிமாறும் போது அளித்தார். அதன் ருசியால் மயங்கிய பரமதத்தன், மற்றொரு கனியையும் கேட்டான். செய்வதறியாது திகைத்த புனிதவதி, சிவபெருமானை வேண்டி ஒரு கனிப்பெற்று கணவருக்கு அளித்தார். அதை உண்ட பரமதத்தன், "இது முதல் கனியைவிட சுவையாக உள்ளது. ஒரு மரத்து கனியில் இவ்வளவு மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. இக்கனி உனக்கு எப்படி கிடைத்தது" என்று கேட்டான். அதற்கு புனிதவதி, ஈசனின் அருளால் கிடைத்ததை சொன்னார். அதை நம்ப மறுத்த பரமதத்தன், "நீ சொல்வது உண்மையானால், ஈசனிடம் இருந்து மற்றொரு கனியை பெற்றுக் கொடு" என்றான். புனிதவதியும் சிவனிடம் வேண்டி மீண்டும் ஒரு கனியைப் பெற்றார். அதைக் கண்ட பரமதத்தன் அதிர்ந்தான். தன் மனைவி தெய்வப் பிறவி என்று அவளை விட்டு பிரிந்து, பாண்டிய நாட்டில் ஒரு பெண்ணை மணம் முடித்து வாழ்ந்தான். அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு 'புனிதவதி' என்று பெயரிட்டு வளர்த்தான். இதை அறிந்த புனிதவதி, சிவபெருமானை வேண்டி, பேய் உருவம் பெற்றார். பின்னர் தலையால் நடந்து திருக்கயிலை சென்றார். ஆனால் வழியிலேயே புனிதவதிக்கு காட்சி கொடுத்து, ஆலங்காட்டில் தன் காலடியில் இருந்து எப்போதும் பாடும் பேறு அருளினார். ஈசனால் 'அம்மை' என்று அழைக்கப்பட்டதால், இவர் 'காரைக்கால் அம்மையார்' என்று அழைக்கப்படலானார்.

அமைவிடம்

சென்னையில் இருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம் செல்லும் சாலையில் சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் திருவாலங்காடு இருக்கிறது. ரெயில் மார்க்கமாக வருபவர்கள் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து திருவலாங்காடு ரெயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஷேர் ஆட்டோக்கள் மூலமாக கோவிலை வந்து அடையலாம்.


Next Story