7-ம் நாள் வாகன சேவை.. சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுத்த நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள்


Thirunelveli Aani Festival kamadhenu vahanam
x

சுவாமி நெல்லையப்பர் வெள்ளி குதிரை வாகனத்திலும், காந்திமதி அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்த காட்சி

வாகன சேவையை தொடர்ந்து சுவாமி- அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா் ஆகியோருக்கு சோடச உபசார தீபாராதனை நடந்தது.

நெல்லை:

தமிழகத்தில் உள்ள பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லையப்பர் கோவில் ஒன்றாகும். இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஆனிப் பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான ஆனிப்பெருந்திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது.

விழாவின் 7-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 8 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 9 மணிக்கு காந்திமதி அம்பாள், தவழ்ந்த திருக்கோலத்தில் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து பல்லக்கு சப்பரத்தில் அம்பாளுடன் சுவாமியும் எழுந்தருளி 4 ரதவீதிகளிலும் உலா வந்தனர்.

இரவில் சுவாமி நெல்லையப்பர் வெள்ளி குதிரை வாகனத்திலும், காந்திமதி அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். தொடர்ந்து சுவாமி- அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா் ஆகியோருக்கு சோடச உபசார தீபாராதனை நடந்தது.

பின்னா் பஞ்ச வாத்தியங்கள் முழங்க சுவாமி-அம்பாள் குடவரை வாயில் தீபாராதனையுடன் கோவிலின் வெளியே வந்தனா். நெல்லை சிவகணங்கள் பஞ்ச வாத்திய இசையில் மங்கள வாத்தியங்கள் முழங்க 4 ரத வீதிகளிலும் வீதிஉலா நடந்தது. அப்போது வேதபாராயணம் மற்றும் சிவனடியாா்களால் பன்னிரு திருமுறை பாராயணமும் பாடப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

இதைத்தொடர்ந்து சுவாமி நடராஜபெருமான் வெள்ளை சாத்தி திருவீதி உலா நடந்தது. கோவிலில் நின்ற சீர் நெடுமாறன் கலையரங்கத்தில் அருணா சகோதரிகளின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும், பரதநாட்டிய நிகழ்ச்சியும், பக்தி சொற்பொழிவும் நடந்தது.


Next Story