மும்மூர்த்திகள் சுயம்புவாக அருளும் திருமூர்த்தி மலை
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி மலையில், திருமூர்த்தி என்றழைக்கப்படும், சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் வீற்றிருக்கும் ஆலயம் இருக்கிறது.
குடைவரைக் கோவிலான இங்கு, மும்மூர்த்திகளும் சுயம்புவாக அருள்பாலிக்கின்றனர். மும்மூர்த்திகளும் ஒன்றாக அருளும் ஆலயங்களில் சிறப்பு மிகுந்ததாக இந்த திருமூர்த்தி மலை உள்ளது. இங்கு இறைவன் குழந்தை வடிவில் இருப்பதாக ஐதீகம். எனவே இத்தல இறைவனிடம் எது கேட்டாலும் கிடைக்கும் என்கிறார்கள். அகத்திய முனிவர் இறைவனின் திருமணக் கோலத்தை பல இடங்களில் கண்டு தரிசித்தார். அதன்படி இங்கும் அகத்திய முனிவருக்கு, இறைவன் தன்னுடைய திருமணக் கோலத்தை காட்டியிருக்கிறார். அந்த இடம், 'பஞ்சலிங்கம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த மலையில் அத்ரி மகரிஷி வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. அவரது மனைவி அனுசூயை. இவர்கள் தங்களுக்கு மும்மூர்த்திகளும் குழந்தையாக பிறக்க வேண்டும் என்று விரும்பினர். அந்த விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவும், அனுசூயையின் கற்பின் மகிமையை உலகுக்கு எடுத்துக் காட்டவும், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் அங்கு தோன்றினர்.
அப்போது அத்ரி மகரிஷி வெளியே சென்றிருந்தார். மும்மூர்த்திகளும் யாசகம் பெறும் வேதியர் உருவில் இருந்தனர். அவர்கள் அனுசூயையிடம், தங்களுக்கு நிர்வாணமாக பிச்சையிடும்படி வேண்டினர். தன் கணவனை மனதால் நினைத்த அனுசூயை, அவருடைய கமண்டலத்தில் இருந்து தண்ணீரை எடுத்து, மூன்று வேதியர்கள் மீதும் தெளித்தார். இதில் அவர்கள் மூவரும் குழந்தைகளாக மாறிப்போயினர். அதன்பிறகு அவர்களுக்கு நிர்வாணமாக பால் பருகக்கொடுத்தார். இந்த நிகழ்வு நடந்த இடமாக திருமூர்த்திமலை இருக்கிறது.
கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இருந்து தெற்கே 21 கிலோமீட்டர் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் தென்திசை நோக்கியுள்ள ஆனைமலைகளில் ஒன்றாக, இந்த திருமூர்த்தி மலை இருக்கிறது. இங்கு தோணி நதி என்னும் பாலாற்றங்கரையில் அமணலிங்கேஸ்வரர் அருள்பாலிக்கின்றனர். இவருக்கு மும்மூர்த்தி ஆண்டவர், திருமூர்த்தி ஆண்டவர் என்ற பெயர்களும் உள்ளன.
அமணன் என்றால் குற்றமற்றவன் என்பது பொருள். குற்றங்களில் இருந்து நீங்கிய இறைவனே, இத்தல இறைவனான அமணலிங்கேஸ்வரர். அமணலிங்கம் என்றால் அழகிய லிங்கம் என்றும் பொருள்படும். ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் சமணர்கள் அதிகமாக வாழ்ந்தனர் என்பதால், சமணலிங்கம் என்று அழைக்கப்பட்டு, பின்னர் அமணலிங்கம் ஆனதாகவும் சிலர் சொல்கின்றனர். வடக்கு நோக்கி லிங்கவடிவில் எழுந்தருளியுள்ள ஒரு பாறைதான், அமணலிங்கேஸ்வரர். இந்த பாறையில் மும்மூர்த்திகளின் வடிவங்கள் சுயம்புவாக காணப்படுகின்றன.
பாறையைக் குடைந்து கருவறை அமைக்கப்பட்டிருக்கிறது. சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் உற்சவ மூர்த்திகளாக கருவறையில் வீற்றிருக்கின்றனர். நீரினால் சூழப்பட்ட அமணலிங்கத்தை சுற்றி வரும்போது, சப்த கன்னிகளை வணங்கலாம். இங்குள்ள எட்டுக்கால் மண்டபத்தில்தான் மும்மூர்த்திகளும் வந்து தங்கியதாக சொல்லப்படுகிறது. அவர்கள் குழந்தையாக இங்கே விளையாடிக் கொண்டிருந்த போது, அருகில் உள்ள கஞ்ச மலையில் இருந்து கல் ஒன்று உருண்டு வந்தது. பட்டாரசி, தேவகன்னி, பத்மகன்னி, சிந்து கன்னி, அகஜா கன்னி, வன கன்னி, சுமதி கன்னி ஆகிய சப்த கன்னியர்கள், 7 விரலி மஞ்சளை வைத்து உருண்டு வந்த கல்லை தடுத்து நிறுத்தி, குழந்தைகளை காப்பாற்றினர். அப்படி உருண்டு வந்த கல்லில் மும்மூர்த்திகளும், 7 விரலி மஞ்சளில் சப்த கன்னிகளும் ஐக்கியமானதாக தல வரலாறு சொல்கிறது.
இந்த ஆலயத்தில் சந்தன வழிபாடு சிறப்புக்குரியதாக உள்ளது. பக்தர்கள் சந்தனத்தை வாங்கி, இங்குள்ள மும்மூர்த்திகள் மீது எறிந்து வழிபாடு செய்கிறார்கள். அப்படி எறியப்படும் சந்தனம் மும்மூர்த்திகளின் நெற்றியில் விழுந்தால், பக்தர்கள் நினைத்த காரியம் விரைவில் நடைபெறும் என்பது நம்பிக்கை. இது தவிர குறுமிளகையும், உப்பையும், திருமூர்த்தி மலை மீது இட்டு வேண்டிக்கொண்டால், பக்தர்களின் குறைகள் நீங்குவதாகவும் நம்பிக்கை உள்ளது. இங்கு சிவபெருமான், ஞான குருவாக இருக்கிறார். எனவே இத்தலத்தில் தட்சிணாமூத்தி வழிபாடு மிகவும் பிரசித்திப் பெற்றதாக இருக்கிறது. மலையின் மீது பஞ்ச லிங்கம் இருக்கிறது. அதன் முன்பாக நாகமும், நந்தியும் உள்ளது. அத்ரி மகரிஷியும், அனுசூயையும் வழிபட்ட லிங்கங்களே இவை என்று சொல்லப்படுகிறது. இந்த கலியுகத்திலும், அவர்கள் இந்த பஞ்ச லிங்கங்களை அருவமாக இருந்து வழிபடுவதாக நம்பப்படுகிறது.
இந்த ஆலயத்தில் தல விருட்சமாக அரச மரம் உள்ளது. தீர்த்தமாக தோணி ஆறு இருக்கிறது. இந்த ஆலயத்தில் விநாயகர், முருகன், நவக்கிரகங்களுக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன. இத்தல விநாயகர் 'சுந்தர கணபதி' என்றும், முருகன் 'பாலசுப்பிரமணியன்' என்றும் அழைக்கப்படுகின்றனர். அமணலிங்கேஸ்வரர் கோவிலின் முன்பு 30 அடி உயரம் உள்ள தீப கம்பம் காணப்படுகிறது. இதன் அடிப்பாகத்தில் அஷ்டதிக்குகளை நோக்கியவாறு பத்ரகாளி, வனதுர்க்கை, விசாலாட்சி, ஊர்த்துவ தாண்டவர், அகோர வீரபத்திரர், ராமர், நரசிம்மர், வேணுகோபாலர் ஆகியோரது சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆலயத்தில் மகா சிவராத்திரி மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரி அன்று நான்கு கால பூஜைகள் நடைபெறும். தவிர ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை நாட்களில் இங்கு தர்ப்பணம் அளிப்பதற்காக கூடும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வாடிக்கை. ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ பூஜைகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆலயத்தில் ஆகஸ்டு மாதம் வருசாபிஷேகம் நடைபெறுகிறது.